உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம்

ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம்


நடிகர்கள் அரசியல் பேசுவதும், அரசியல்வாதிகளை விமர்சிப்பதும் அவ்வப்போது நடந்தேறும் சம்பவம். அதிலும், முதல்வருக்கு முன்னாலேயே தன் மனதில் பட்டதை பேசிய நடிகர்களும் இருக்கின்றனர். ரஜினிகாந்த், ஜெயலலிதா முன்பும், அஜித்குமார் கருணாநிதி முன்பும் இதுபோன்ற தனது ஆதங்கங்களை வெளிப்படையாக பேசி சர்ச்சையானது. அப்படி ஒரு சம்பவத்தை இப்போது நினைவுகூர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ரஜினிகாந்த்.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு 'செவாலியே' விருது வழங்கப்பட்டதற்காக 1995ல் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது முதல்வர் ஜெயலலிதா முன்பு, நடிகர் ரஜினி பேசியது சர்ச்சையானது.

அன்று மேடையில் நன்றியுரை ஆற்ற வந்த நடிகர் ரஜினிகாந்த், முதலில் முதல்வர் ஜெயலலிதா, சிவாஜி என பலரையும் பாராட்டி பேசினார். பின்னர், திடீரென ஜெயலலிதா பக்கம் திரும்பி, விரலை சொடுக்கி, ''நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன். நீங்க பிலிம் சிட்டி திறந்து வைத்தபோதே சிவாஜியை கவுரவிச்சிருக்கணும். நீங்க அதை செய்யல, அவரை மதிக்கல. அந்த விழா மேடையில அவரை உட்கார வச்சு கவுரவம் பண்ணிருக்கணும், அதை செய்யாதது தப்பு, தப்பு பண்றது மனித இயல்பு. தப்பை திருத்திக்கிறது மனிதத்தனம். அப்போ பண்ண தப்ப, இப்போ பிரமாண்ட விழா நடத்தி சரி பண்ணிட்டீங்க. தப்பு யார் பண்ணினாலும் தப்புன்னு சொல்லுவேன். அது குடிமகனோட உரிமை. அதுவும் ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு நிறையவே உரிமை இருக்கு'' என பேசியிருந்தார்.

இந்த நிகழ்வை தற்போது மீண்டும் நினைவு கூர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த். நேற்று (ஜன.,07) சென்னையில் இயக்குனர், நடிகர் பாக்யராஜ், திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், அந்த நிகழ்வு குறித்து பேசியதாவது: என் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வு ஒன்று உள்ளது. இந்த விழாவுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் அதுதான். அதனை நிச்சயம் என்றைக்காவது சொல்ல வேண்டும், மக்களுக்கு அது தெரிய வேண்டும் என காத்திருந்தேன். அதை சொல்ல வேண்டிய சரியான விழா இதுதான்.

ஆவேசம்

கோபத்திற்கு ஆயுள் கம்மி, ஆனால், கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு ஆயுள் அதிகம். அப்படிதான், 1995ல் நடிகர் சிவாஜிக்கு, 'செவாலியே' விருது வழங்கியதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரசு மற்றும் திரைத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் ஜெயலலிதா முன்பு நான் கொஞ்சம் ஆவேசமாக பேசினேன். அது ஜெயலலிதாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. பலரின் முகம் மாறியது.


அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஓபன் ஜீப்பில் ரசிகர்கள் முன்பு போக வேண்டியிருந்தது. ஆனால், 'முதல்வர் கோபமாக இருக்கிறார், இன்று வேண்டாம்' என சிலர் எச்சரித்தனர். அதனை கேட்காமல், நான் ஜீப்பில் சென்றபோது, சிலர் என் மீது கல் எறிந்தார்கள், எதிர்த்து கத்தினார்கள். அப்போது வெளியான 'பாட்ஷா' பெரிய ஹிட்டாகி, பலர் என்னை பார்க்க ஆர்வமாக இருந்தாலும், அந்த சமயத்தில் என்னை சிலர் தலையில் அடித்தார்கள், சிலர் கிள்ளினார்கள், சிலர் திட்டினார்கள். 3 பஸ்ஸில் வந்த நடிகர்கள் அனைவரும் அதற்குள் கிளம்பிவிட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
உதவிய பாக்யராஜ்

அப்போது தான் தூரத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் ஓடிவந்தார். அவர் என்னை உடனடியாக அழைத்துக்கொண்டு, போலீஸ் ஜீப்பில் ஏற சொன்னார். அருகே இருந்த போலீஸ் எஸ்.ஐ அமைதியாக நின்றிருந்தார். முதல்வர் பற்றி அப்படி பேசியதால், எங்கே எனக்கு உதவினால், அவர் வேலைக்கு ஆபத்து வருமோ என பயந்து நின்றிருப்பார் போல. பாக்யராஜ் கோபமாக அந்த எஸ்.ஐ.,யை பார்த்து, 'ஒரு நடிகரை எல்லாரும் சேர்ந்து தள்ளிக்கொண்டு போகிறார்கள், நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா. எடுங்க ஜீப்பை, உட்கார வைத்து அவரை வீட்டில் விடுங்கள், இல்லையெனில் விடமாட்டேன், நாளை மீடியாவில் சொல்லிவிடுவேன், பாதுகாப்பாக அவரை வீட்டில் விடவேண்டும்' என சொன்னதும், பயந்து, அவர் என்னை ஜீப்பில் ஏற்றினார்.

பாக்யராஜூம், 'சார் பூர்ணிமா அங்கு இருக்கிறார், நானும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவேன். நீங்கள் போய் சேர்ந்ததும் எனக்கு போன் பண்ணுங்க' என ஜாக்கிரதையாக பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நல்ல மனிதர், அருமையான மனிதர், நீண்ட நாட்கள் நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் நல்லா இருக்கணும். இவ்வாறு ரஜினி பேசினார்.

பழைய நிகழ்வின்போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை ரஜினி மனம் திறந்து பேசியிருப்பது, அரசியலில் மட்டுமல்லாமல், திரையுலகிலும் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !