உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம்

பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம்

கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுடாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டாக்சிக்'. மார்ச் 19ம் தேதி பான் வேர்ல்டு படமாக வெளியாக உள்ள இந்தப் படத்தின் நாயகன் யஷ் கதாபாத்திர அறிமுகத்தை இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டார்கள்.

அதற்காக அவரது கதாபாத்திரமான 'ராயா' அறிமுகம் என்ற ஒரு வீடியோ முன்னோட்டத்தையும் வெளியிட்டார்கள். காரில் ஒரு படுக்கையறைக் காட்சியுடன், அதிரடியான வன்முறையுடன் சுமார் 3 நிமிடம் ஓடக் கூடிய அந்த முன்னோட்டம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழுவதும் ஆங்கில வசனங்களுடன், ஹாலிவுட் நடிகர்களுடன் யஷ் நடித்துள்ள இந்த வீடியோ தற்போது 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. எதிர்பார்த்ததை விடவும் குறைவுதான் என்றாலும் போகப் போக இன்னும் அதிகமாகலாம்.

இதனிடையே, இப்படியான படங்களின் முன்னோடியான இயக்குனர் ராம்கோபால் வர்மா, இந்த வீடியோவைப் பார்த்த பின் மலையாளப் பெண் தோற்றத்தில் உள்ள கீத்து மோகன்தாஸின் ஒரு அழகிய புகைப்படத்தைப் பகிர்ந்து, “யஷ் நடித்த டிரைலரைப் பார்த்த பிறகு, பெண்களின் அதிகாரம் மிக்க சின்னமாக கீத்து மோகன்தாஸ் இருப்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. எந்த ஆண் இயக்குனரையும் இந்தப் பெண்ணுடன் ஒப்பிட முடியாது. அவர்தான் இதைப் படமாக்கினாரா என என்னால் இன்னும் நம்ப முடியவில்லை” என ஆச்சரியப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !