‛பராசக்தி'க்கு யுஏ சான்று : நாளை படம் ரிலீஸ்
சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படத்திற்கு தணிக்கை வாரியம் ‛யுஏ' சான்று வழங்கியது. இதனால் திட்டமிட்டப்படி படம் நாளை(ஜன., 10) வெளியாகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள படம் ‛பராசக்தி'. தமிழகத்தில் 1960களில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்ட பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. நாளை படம் ரிலீஸ் என அறிவித்த நிலையில் ஹிந்தி எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்களால் சென்சாரில் சிக்கல் நீடித்தது. இதையடுத்து தணிக்கை வாரியம் சில காட்சிகளை நீக்க சொல்லியும், சில காட்சிகளில் மியூட் போடவும் அறிவுறுத்தியது. அதுதொடர்பான பணிகளை முடித்து படக்குழு மீண்டும் தணிக்கை வாரியத்திடம் சமர்பித்தது. இதையடுத்து ‛பராசக்தி' படத்திற்கு யுஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 42 நிமிடமாக உள்ளது.
தணிக்கை சான்று கிடைத்ததையடுத்து திட்டமிட்டப்படி ‛பராசக்தி' படம் நாளை வெளியாக உள்ளது. முன்னதாக இன்று விஜயின் ஜனநாயகன் படம் ரிலீஸாக இருந்தது. ஆனால் தணிக்கை பிரச்னையில் அப்படம் உள்ளதால் அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பொங்கலுக்கு ‛பராசக்தி' படம் மட்டுமே முன்னணி நடிகரின் படமாக வெளியாக உள்ளது.
இதனிடையே பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தமிழ் வெல்லும் என குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் கையில் கொடி பிடித்திருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். கொடியில் யுஏ என குறிப்பிடப்பட்டுள்ளது.
25 கட்
பராசக்தி படத்திற்கு 25 கட் கொடுத்துதான் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலும் வெளியாகி உள்ளது. குறிப்பாக, படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் 'நீதி பரவட்டும்' என மாற்றப்பட்டுள்ளது. 'ஹிந்தி என் கனவை அழித்தது' என்ற வசனத்திற்கு பதிலாக 'என் ஒரே கனவை ஹிந்தி திணிப்பு எரித்தது' என மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று ஹிந்திக்கு எதிரான சில வசனங்களை மாற்றியிருப்பதோடு, சண்டைகாட்சிகளின் வன்முறையும் குறைக்கப்பட்டுள்ளது.