உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பராசக்தி'க்கு போட்டியாக ‛மஹாசக்தி'

‛பராசக்தி'க்கு போட்டியாக ‛மஹாசக்தி'

இந்த பொங்கலுக்கு விஜயின் ‛ஜனநாயகன்', சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இதுதொடர்பாக வலைதளங்களில் சண்டை நடந்தது. ‛ஜனநாயகன்' படம் சென்சார் பிரச்னையில் சிக்கி வெளியீட்டு தேதியிலிருந்து பின்வாங்கிவிட்டது. பராசக்தி படத்திற்கு இப்போது சான்று கிடைத்து நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக மஹாசக்தி என்ற குறும்படத்தை வெளியிடுகிறார் ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் புகழ் நடிகர் ரவிச்சந்திரன்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இப்பவும் கடந்த 1967ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மைய கருவாக வைத்து பராசக்தி என்ற பெயரில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்க்ரன் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அதன் தாக்கம், ஏதோ திமுக தான் தமிழ் மொழியை காப்பாற்றியது போன்ற தோற்றத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இந்த திரைப்படத்தை எடுத்து வெளியிடுகின்றனர். மொழி உணர்வை தூண்டி அரசியல் செய்யும் இவர்களின் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்ட மஹாசக்தி என்ற பெயரில் நாங்கள் ஒரு குறும்படத்தை தயாரித்திருக்கிறோம். அவர்கள் பெரிய நடிகர்கள் பட்டாளத்தையும், சுமார் 140 பட்ஜெட்டில் பராசக்தி படத்தை தயாரித்திருக்கிறார்கள். நாங்கள் தொழில் முறை நடிகர்களாக இல்லாதவர்களை வைத்து 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் எடுத்துள்ள எங்கள் மஹாசக்தி குறும்படத்தை பராசக்தி வெளியாகும் அதே நாளில் ( 10.1.26) மாலை 6.00 மணிக்கு தாமரை டிவியில் வெளியிட உள்ளோம்.

அரசு பள்ளி மாணவ, மாணவியரை மட்டும் ஹிந்தி படிக்க விடாமல் தடுத்து ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவது ஏன்?, ஹிந்தியை கட்டாயமாக்கிய காங்கிரஸ் உடன் தொடர்ந்து கூட்டணியில் இருப்பது ஏன்?, திமுக தலைவர்கள் ஹிந்தி மொழிக்கு எதிராக மொழி அரசியலை செய்து கொண்டே ஹிந்தி கட்டாய மொழி பாடமாக இருக்க கூடிய சி.பி.எஸ்.சி பள்ளிகளை நடத்துகிறார்களே ஏன்?, 5 முறை ஆட்சியில் இருந்தும் தமிழை கட்டாய பாடமாக்காதது ஏன்? இதையெல்லாம் எங்கள் படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம்.

இவர்கள் தமிழை காப்பாற்றவோ, தமிழை வளர்க்கவோ ஹிந்தியை எதிர்க்கவில்லை, ஆங்கிலத்திற்கு தொண்டு செய்யவே ஹிந்தியை எதிர்க்கிறார்கள். தமிழர்களிடம் இருக்கும் ஹிந்து ஆன்மிக நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும், அதற்கு தமிழ் மொழி அழிய வேண்டும் என்பது தான் இவர்கள் இலக்கு என்பன போன்ற கருத்துக்களை ஆழமாக காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

1969களிலும், 80களிலும் மொழி வெறியை தூண்டி, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி அரசியல் லாபம் அடைந்தது போல் 2026லும் இந்த பராசக்தி படத்தை பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதை தடுத்து மக்களிடம் உண்மை சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். அனைவருக்கும் சமக்கல்வி அதுவே உண்மையான கல்வி என்பதை ஆணித்தரமாக பேசியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !