ஆஸ்கருக்கு தேர்வான ‛டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா சாப்டர் 1, மகாவதார் நரசிம்மா'
உலகளவில் சினிமா துறையில் உயரிய விருதாக ஆஸ்கர் பார்க்கப்படுகிறது. 98வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸில் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. உலகளவில் பல்வேறு படங்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டுள்ளன. இந்தியா சார்பில் தேர்வான ஹிந்தி படமான ‛ஹோம்பவுண்ட்' சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் தேர்வான 15 படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. விரைவில் இது இறுதிப்போட்டியில் இடம் பெறலாம்.
இந்நிலையில் டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா சாப்டர் 1 மற்றும் மகாவதார் நரசிம்மா ஆகிய படங்களும் ஆஸ்கரின் சிறந்த திரைப்பட பிரிவில் போட்டியிட தகுதி பெற்றுள்ளது. உலகம் முழுவதிலுள்ள தேர்வான 201 திரைப்படங்களின் பட்டியலில் இந்த இரு படங்களும் இடம் பெற்றுள்ளன. இவை அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.
தமிழில் அபிஷந்த் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் கடந்தாண்டு வெளியாகி 90 கோடி அளவுக்கு வசூலை ஈட்டியது. மனிதம் பேசிய இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
கன்னடத்தில் உருவான இந்த இரு படங்களையும் ஹோம்பாலே நிறுவனம் தயாரித்து இருந்தது. மகாவதார் நரசிம்மா படம் அனிமேஷன் படமாக வெளியாகி உலகம் முழுக்க 350 கோடிக்கு மேல் வசூலித்தது. காந்தாரா சாப்டர் 1 படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்தார். காந்தாரா படத்தின் அடுத்த பாகமாக இப்படம் வெளியானது. உலகளவில் சுமார் 900 கோடி வசூலை இப்படம் எட்டியது.
இதேப்போல் ஹிந்தி படமான ‛தன்வி' என்ற படமும் தேர்வாகி உள்ளது.