‛ஜனநாயகன்' படத்திற்கு சான்றிதழ் அளிக்க சொன்ன உத்தரவுக்கு தடை : சிக்கலில் விஜய் படம்
விஜயின் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னையில் சிக்கி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் அளிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் அதற்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது.
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் 'ஜனநாயகன்'. விஜயின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட இப்படம் இன்று(ஜன., 9) ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காததால் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழங்கு தொடர்ந்தது.
தணிக்கை குழுவினர் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவெடுத்துள்ளனர். ஆனால் தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஒரு படத்தை தணிக்கை செய்ய 15 நாட்கள் தேவைப்படும். எனவே, ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வாரம் அவகாசம் தேவை. இந்த விஷயத்தில் எங்களுக்கு தீயநோக்கம் எதுவுமில்லை என தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் வாதிட்டது.
பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறுஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதிக உறுப்பினர்களின் முடிவை எப்படி செல்லாது என சொல்ல முடியும்? என தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இன்று(ஜன., 9) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.
அதன்படி இந்த வழக்கு மீதான தீர்ப்பை இன்று நீதிபதி பிடி ஆஷா வாசித்தார். ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியது தவறானது. உடனடியாக அந்த படத்திற்கு சென்சார் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று மாலையே தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இன்றைக்கே மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசரம் ஏன் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தணிக்கை வாரியம், எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என வாதிட்டனர்.
தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி எதற்காக உத்தரவு பிறப்பித்தார். சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, ‛ஜனநாயகன்' படத்துக்கு சான்று வழங்க சொன்ன தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்து வழக்கை ஜன., 21ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
கோர்ட்டின் இந்த உத்தரவால் ஜனநாயகன் படத்தை இப்போதைக்கு வெளியிட முடியாத சூழல் எழுந்துள்ளது. ஜன., 21ம் தேதிக்கு பின்னர் நல்ல தீர்ப்பு வரும் பட்சத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன., 23ல் படம் வெளியாக வாய்ப்புள்ளது.