'விஸ்வாசம்' படத்தை 'உல்டா' செய்து 'மன ஷங்கர வரபிரசாத் காரு'
விஜய் நடித்து வெளிவர உள்ள 'ஜனநாயகன்' படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'பகவந்த் கேசரி' தெலுங்குப் படத்தின் ரீமேக் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், 'பகவந்த் கேசரி' படமே தமிழில் சிவாஜி நடித்த ‛பாபு', சரத்குமார் நடித்து வெளிவந்த 'ஏய்' படங்களின் 'உல்டா' தான் என்பது பற்றி நாம் ஏற்கெனவே விவரமாக எழுதியுள்ளோம்.
'பகவந்த் கேசரி' படத்தின் இயக்குனரான அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் 'மன ஷங்கர வரபிரசாத் காரு'. இப்படத்தின் கதையை அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் 2019ல் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்திலிருந்து 'உல்டா' செய்துள்ளார்.
சிரஞ்சீவி ஒரு அரசு பாதுகாப்பு அதிகாரி. இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான சச்சின் கடேகர் மற்றும் அவரது மகள் நயன்தாரா மீது அடையாளம் தெரியாத யாரோ சிலர் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க சிரஞ்சீவி நியமிக்கப்படுகிறார். நயன்தாரா தான் சிரஞ்சீவியின் முன்னாள் மனைவி. ஒரு பிரச்சனையில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். பாதுகாப்பு கொடுப்பதோடு மீண்டும் தனது மனைவியுடன் சிரஞ்சீவி ஒன்று சேர முயற்சிக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
'விஸ்வாசம்' படத்தில் அதே பணக்காரக் குடும்பத்துப் பெண் நயன்தாரா. அஜித், ஒரு கிராமத்து ஆள். அவ்வளவுதான் வித்தியாசம்.
'பகவந்த் கேசரி' படத்திற்காவது அதற்கு 19 வருடங்களுக்கு முன்பு வந்த 'பாபு, ஏய்' படத்தின் கதையை உல்டா செய்திருந்தார். இந்த 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்திற்கு 6 வருடங்களுக்கு முன்பு வந்த 'விஸ்வாசம்' படத்தின் கதையை உல்டா செய்திருக்கிறார்.
இதையும் புதிய கதை என நினைத்து தமிழில் யாராவது ரீமேக் உரிமை வாங்கி 'மண நாயகன்' என படமெடுத்ததாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.