நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி
கடந்த ஆண்டு வெங்கடேஷிற்கு ஜோடியாக தெலுங்கில் மீனாட்சி சவுத்ரி நடித்து சங்கராந்திக்கு வெளியான படம் சங்கராந்திகி வஸ்துனம். ஐஸ்வர்யா ராஜேசும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூலித்தது. அதையடுத்து நவீன் பொலி செட்டியுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள அனகனகா ஒக ராஜு என்ற படமும் இந்த ஆண்டு சங்கராந்தியை ஒட்டி வருகிற 14-ஆம் தேதி வெளியாகிறது.
மீனாட்சி சவுத்ரி கூறுகையில், சங்கராந்தி என்றாலே எனக்கு அதிர்ஷ்டமான நாள்தான். கடந்த ஆண்டு சங்கராந்திகி வஸ்துனம் படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதேபோல் இந்த ஆண்டு சங்கராந்திப் பண்டிகைக்கு அனகனகா ஒக ராஜு என்ற படம் திரைக்கு வருகிறது. அதனால் இந்த படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன். இதில் ஒரு முழுமையான நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. அதனால் இப்படத்தில் நடிக்கும் காட்சிகளுக்காக ரிகர்சல் எடுத்து நிறைய நேரத்தை செலவிட்டேன். எனது நகைச்சுவை நடிப்புக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் மீனாட்சி சவுத்ரி.