'டாக்சிக்' வீடியோவுக்கு எதிராக புகார்
கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தின் கதாநாயகன் அறிமுக வீடியோ ஒன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மிகவும் ஆபாசமான படுக்கையறை காட்சியுடன் ஆரம்பமான அந்த வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோ யு டியூப் தளத்தில் தற்போது 85 மில்லியன் பார்வைகளையும், இதர சமூக வலைத்தளங்களில் சேர்த்து 200 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
அந்த வீடியோ குறித்து கர்நாடகா ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் லோஹித் ஹனுமபுர், கர்நாடகா மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். “டாக்சிக்' வீடியோவில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் ஆட்சேபணைக்கு உரியவை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்,” என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா மாநில ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் பிரிவு செயலாளர் உஷா மோகன் இது குறித்த புகார் ஒன்றையும், மகளிர் ஆணையத்திடம் அளித்துள்ளார். அதில், “இந்தத் திரைப்படத்தின் டீசரில் உள்ள ஆபாசமான மற்றும் வெளிப்படையான உள்ளடக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக நலனுக்கு தீவிரமான தீங்கு விளைவிக்கிறது. எந்த வயது தொடர்பான எச்சரிக்கையும் இல்லாமல் பொதுத் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தக் காட்சிகள், பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துகின்றன மற்றும் கன்னட கலாச்சாரத்தை அவமதிக்கின்றன. மகளிர் ஆணையம் இதை தீவிரமான பிரச்சனையாகக் கருதி உடனடினயாக நடவடிக்கை எடுத்து மாநிலத்தின் கலாச்சாரம், மற்றும் நெறிமுறை மதிப்பைக் காக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
சமூகத்தின் மீதான எதிர்மறையான தாக்கம், குறிப்பாக சிறார்களுக்கு என்று குறிப்பிட்டு, மகளிர் ஆணையம், மாநில அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, டீசரை தடை செய்யவும், சமூக ஊடக தளங்களிலிருந்து அதை அகற்றவும் உத்தரவிடுமாறு வலியுறுத்தியுள்ளது.
இப்படத்தை மலையாள திரையுலகத்தைச் சேர்ந்த பெண் இயக்குனரான கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு வேறு சில திரைப்படங்களில் பெண்களை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றபோது அதற்கு எதிராக மற்ற மலையாள நடிகைகளுடன் சேர்த்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஆனால், அவரே இப்போது பெண்ணை போகப் பொருளாகக் காட்டியிருப்பது சரியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.