திடீரென பட்டியலில் வந்த 2026 பொங்கல் ரிலீஸ் படங்கள் : போதிய தியேட்டர்கள் கிடைக்குமா...?
2026 பொங்கலை முன்னிட்டு 'ஜனநாயகன், பராசக்தி' ஆகிய படங்கள் மட்டும் தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் தள்ளி வைக்கப்பட்டது. 'பராசக்தி' படம் அறிவித்தபடி கடந்த வாரம் வெளியாகிவிட்டது.
'ஜனநாயகன்' படம் வெளிவராத காரணத்தால் உடனடியாக தயாராக இருந்த சில படங்களை பொங்கலுக்கு வெளியிட அறிவித்துவிட்டார்கள். அந்த விதத்தில், யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி மற்றும் பலர் நடித்துள்ள 'ஜாக்கி', படம் ஜனவரி 14ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது. 2021ல் வெளிவந்த 'மட்டி' படத்தை இயக்கிய டாக்டர் பிரகபல் இந்த 'ஜாக்கி' படத்தை இயக்கியுள்ளார். மதுரையில் நடக்கும் கிடா சண்டையை மையப்படுத்திய படம் இது.
கடந்த வருடப் பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு அப்படியே தள்ளிப் போன படம் 'வா வாத்தியார்'. பின்னர் கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக வெளியாகாமல் போனது. தற்போது நீதிமன்ற விவகாரத்தை எல்லாம் முடித்துவிட்டு படத்தை ஜனவரி 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டிருந்த படம் 'திரௌபதி 2'. மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா பிறைசூடன், நட்டி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஜனவரி 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். இந்து மன்னர்களுக்கும், முகலாயர்களுக்கும் இடையேயான மோதல் குறித்த படமாக உருவாகியுள்ளது.
மலையாளத்தில் 'மாக்னெட்டோ, பேலிமி' படங்களை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தமிழில் இயக்கியுள்ள முதல் படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. ஜீவா, பிராதனா நாதன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஒரு கிராமத்து காமெடிப் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே வெளியான 'பராசக்தி' படமும் தியேட்டர்களில் இருப்பதால், இந்த நான்கு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதே கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். அதனால், இதற்கு மேலும் படங்கள் வருவது சந்தேகம்தான். அப்படியே வந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் மொத்தமாக 150 முதல் 200 தியேட்டர்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.