பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 2 மலையாளப் படம்
ரஜினிகாந்த் ஏராளமான தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் மலையாள படங்களில் அந்த அளவிற்கு நடிக்கவில்லை. எதார்த் சினிமா ரசிகர்களாக மலையாளிகள் இருந்ததால் ரஜினியின் ஆக்ஷன் படங்களுக்கு அங்கு பெரிய வரவேற்பு இருக்காது என்பதாலேயே அவர் நடிக்கவில்லை.
என்றாலும் 1979ம் ஆண்டு கமலுடன் இணைந்து நடித்த திரைப்படம் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் படமாக்கப்பட்டது. இரண்டு மொழிகளிலுமே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படம் 'ஆயிரம் இரவுகள்' என்ற அரேபிய கதை தொகுப்பில் உள்ள ஒரு கதையாகும். அந்த கதையில் இல்லாத ஒரு கேரக்டரை ரஜினிக்காக உருவாக்கி நடிக்க வைத்தனர். ஐ.வி.சசி இயக்கினார்.
1981ம் ஆண்டு 'கர்ஜனை' படம் வெளிவந்தது. சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ஒரே நேரத்தில் மலையாளத்தில் 'கர்ஜனம்' என்றும் கன்னடத்தில் 'கர்ஜனே' என்றும் படமாக்கப்பட்டது.
மலையாள பதிப்பில் அங்கு அப்போது ஆக்ஷன் ஹீரோவாக இருந்த ஜெயன் நடிப்பதாக முடிவாகி சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறந்ததால், மலையாளத்திலும் ரஜினியே நடித்தார். தமிழைப்போலவே மலையாளத்திலும் வெற்றி பெற்றது. ஆனால் அதன்பிறகும் மலையாளத்தில் ரஜினி நடிக்கவில்லை.