பிளாஷ்பேக்: சுஹாசினியுடன் ஆட மறுத்த கமல்
கே.பாலச்சந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' படம் அவரது கேரியரில் முக்கியமான படம். 'அரங்கேற்றம்' லலிதா, 'அவள் ஒரு தொடர்கதை' கவிதா, 'அபூர்வ ராகங்கள்' பைரவி, 'அவர்கள்' அனு, 'அக்னி சாட்சி' கண்ணம்மா என்ற பெண் கதாபாத்திரங்களை போன்றே 'மனதில் உறுதி வேண்டும்' நந்தினியும் குறிப்பிடத்தக்கவர்.
குடும்பத்திற்காக தன்னை தியாகம் செய்யும் ஒரு நர்சின் கதை. இந்தப் படத்தில்தான் லலிதாகுமாரி, விவேக், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் அறிமுகமானார்கள். இந்த படத்தில் சுஹாசினியின் தோழியாக வரும் லலிதாகுமாரி சரியான சினிமா பைத்தியமாக இருப்பார். சுஹாசினிக்கு ஒரு காதல் வரும்போது அவரது காதலன் எப்படி இருப்பார் என்பதை லலிதா குமாரி கற்பனை செய்வது போன்று ஒரு பாடல் காட்சி. 'வங்காள கடலே...' என்ற பாடலில் சுஹாசினிக்கு ஜோடியாக ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோரை கனவில் ஆட வைத்து ரசிப்பார். இந்த காட்சியில் கமலும் ஆடுவதாக இருந்தது. பின்னர் என்ன இருந்தாலும் நிஜத்தில் அண்ணன் மகள், அவருடன் எப்படி டூயட் பாட முடியும் என்று கமல் மறுத்து விட்டார்.