உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முழு கடனையும் திருப்பி கொடுத்தால் வெளியிடலாம்: 'வா வாத்தியார்' வழக்கில் கோர்ட் உத்தரவு

முழு கடனையும் திருப்பி கொடுத்தால் வெளியிடலாம்: 'வா வாத்தியார்' வழக்கில் கோர்ட் உத்தரவு


கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த படத் தயாரிப்பிற்காக அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவரிடமிருந்து 10.35 கோடியை கடனாக வாங்கியிருந்தார் ஞானவேல்ராஜா. இந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரமாக செலுத்த வேண்டும்.

கடன் கொடுத்த அர்ஜூன்லால் தன்னை திவாலானவராக அறிவித்ததால் அவரது சொத்துக்களை இப்போது சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார். கடனை திருப்பிச் செலுத்தும் வரை, நடிகர் கார்த்தி நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள 'வா வாத்தியார்' படத்தை வெளியிடக்கூடாது என தடை விதிக்கக்கோரி சொத்தாட்சியர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, படத்தை வெளியிட இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் விதித்தது. மேலும், அந்த படத்தின் மீதான உரிமையை ஏலம் விடவும் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ கிரீன் தரப்பில் 3.75 கோடிக்கான வரைவு காசோலை தாக்கல் செய்யப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தும் பட்சத்தில், 'வா வாத்தியார்' படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில் படத்தை நாளை வெளியிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !