கோல்டன் குளோப் விருது விழா: 4 விருகளை பெற்ற லியார்னடோ டி காப்ரியோ படம்
2025ம் ஆண்டுக்கான 83வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடந்தது. ஆஸ்கர் விருதுக்கு நிகரான விழாவாக இந்த விழா கருதப்படுகிறது. சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் மியூசிக்கல், காமெடி பிரிவில் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் லியார்னடோ டி காப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' படம் விருதுகளை குவித்தது. 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த திரைக்கதை, இயக்குனர், துணை நடிகை ஆகிய 4 விருதுகளை பெற்றது.
'மார்ட்டி சுப்ரீம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை திமோதி சாலமே வென்றார். 'இப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வுட் கிக் யூ' படத்தில் நடித்ததற்காக ரோஸ் பைரன் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'அடலசென்ஸ்க்' வெப் சீரீஸ்க்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. இதில் நடித்துள்ள சிறுவன் ஓவன் கூப்பர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றார். தனது 16வது வயதில் தனது முதல் வெப் சீரீஸ்க்காகவே கோல்டன் குளோப் விருது வாங்கி உள்ளார்.
டிராமா பிரிவில் சிறந்த படமாக 'ஹாம்னெட்' தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இசைக்கான விருதை லுட்விக் கோரன்சன் பெற்றார். சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கான விருதை 'சின்னர்ஸ்' படம் வென்றது.
'தி சீக்ரெட் ஏஜென்ட்' படத்தில் நடித்ததற்காக வாக்னர் மவுரா சிறந்த நடிகராகவும், 'சென்டிமென்டல் வேல்யூ' படத்தில் நடித்ததற்காக ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் சிறந்த துணை நடிகராகவும் விருது பெற்றனர்.
அனிமேஷன் பிரிவில் சிறந்த படமாக 'கே-பாப் டீமான் ஹண்டர்ஸ்' தேர்வு செய்யப்பட்டது. ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் சிறந்த படமாக பிரேசிலிய திரைப்படமான 'தி சீக்ரெட் ஏஜென்ட்' தேர்ந்தெடுக்கப்பட்டது.