உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே மாதிரியான கதையில் 3 படங்கள் : அனைத்திலும் கதாநாயகி நயன்தாரா !!!

ஒரே மாதிரியான கதையில் 3 படங்கள் : அனைத்திலும் கதாநாயகி நயன்தாரா !!!

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மற்ற மொழி சினிமாவில் கூட சில வருடங்கள் முன்பு வரை ஹாலிவுட் படங்கள், இதர வெளிநாட்டுப் படங்கள் ஆகியவற்றைக் காப்பியடித்து படங்களை எடுத்து வந்தனர். நமது சினிமா ரசிகர்கள் வெளிநாட்டுப் படங்களை அதிகம் பார்க்க ஆரம்பித்த பிறகு அப்படியான காப்பிகள் கொஞ்சம் குறைந்தது.

கடந்த சில வருடங்களில் ஓடிடி தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியால், நமது ரசிகர்கள் மொழி பேதம் இல்லாமல் பல உலக மொழிப் படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், எந்த மொழியிலிருந்து கதைகளைக் காப்பியடித்து இங்கு படங்களை எடுக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

இதனால், தற்போது இங்கேயே வேறு மொழிகளில் வெளிவந்த பழைய படங்களைப் பார்த்து அதிலிருந்து கதைக் களத்தைக் கொஞ்சம் மாற்றி, கதாபாத்திரங்களை கொஞ்சம் மாற்றி படத்தை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜய் நடித்து வெளிவர உள்ள 'ஜனநாயகன்' படம், தெலுங்குப் படமான 'பகவந்த் கேசரி' படத்தின் உரிமை வாங்கி செய்யப்பட்ட ரீமேக். ஆனால், அந்த 'பகவந்த் கேசரி' படத்தை, இதற்கு முன்பு தமிழில் வெளிவந்த 'பாபு, ஏய்' படங்களின் அப்பட்டமான காப்பி என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால், அதற்கு அவர்கள் எந்த உரிமையும் கொடுத்து வாங்கியதாகத் தெரியவில்லை.

இதனிடையே, நேற்று சிரஞ்சீவி, நயன்தாரா நடித்து வெளியான தெலுங்குப் படமான 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படம் தமிழில் அஜித், நயன்தாரா நடித்து வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தின் உல்டா தான் என சர்ச்சை எழுந்தது.

அந்த 'விஸ்வாசம்' படத்தின் கதையும் ஒரிஜனல் கதை அல்ல என அந்தப் படம் வெளிவந்த போதே ஒரு சர்ச்சை வந்தது. தெலுங்கில் 2007ல் வெங்கடேஷ், நயன்தாரா நடித்து வெளிவந்த 'துளசி' படத்திலிருந்து சுட்ட கதை என்றார்கள். அந்தப் படத்தை இயக்கியது 'அகண்டா' படத்தின் இயக்குனர் போயபாடி சீனு.

ஒரே மாதிரியான கதையாக வந்த 'துளசி, விஸ்வாசம், மன ஷங்கர வரபிரசாத் காரு' படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் நயன்தாரா. அவரிடம் கதை சொல்லும் போது ஒரே மாதிரியான கதை என்பது அவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !