ராம்சரண் படத்தால் இயக்குனர் சுகுமாருக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகிறது : ராஜமவுலி ஆருடம்
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபு நடிப்பில் வாரணாசி என்கிற படத்தை இயக்கி வருகிறார். நடிகர் மகேஷ்பாபு உடன் இவர் இணைவது இதுதான் முதல் முறை. அதேசமயம் நடிகர் ராம்சரணுக்கு மகதீரா, ஆர்ஆர்ஆர் என இரண்டு படங்கள் மூலம் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தவர் ராஜமவுலி. அதனால் நடிகர் ராம்சரண் தன்னுடைய படங்களின் கதை பற்றி ராஜமவுலியை சந்திக்கும்போது விவாதிப்பது வழக்கம்.
அப்படி புஷ்பா இயக்குனர் சுகுமாருடன் ராம்சரண் அடுத்து இணையவுள்ள படத்தின் ஓபனிங் காட்சி பற்றி சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலி இடம் பகிர்ந்து கொண்டுள்ளார் ராம்சரண். அந்த காட்சியை கேட்டு பிரமித்துப்போன ராஜமவுலி அந்த பிரமிப்பை தனது பதிவு வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இந்த இடத்தில் ஒரு தகவலை சொல்லித்தான் ஆக வேண்டும். சுகுமார், ராம்சரண் இணையும் படத்தின் ஓபனிங் காட்சி பற்றி எனக்குத் தெரியும். அதைப் பற்றி நான் முழுதாக சொல்லப்போவதில்லை.
ஆனால் சுகுமாருக்கு நிச்சயமாக ஹார்ட் அட்டாக் வரப்போகிறது. ஆனால் அது அந்த ஓப்பனிங் காட்சிக்கு தியேட்டரில் கிடைக்கும் வரவேற்பினால். படம் பார்க்கும் ரசிகர்கள் அந்த ஓப்பனிங் காட்சியை பார்க்கும் போது தங்கள் இருக்கையில் நடுக்கத்துடன் இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி” என்று கூறியுள்ளார்.
ராஜமவுலியே இப்படி கூறியுள்ளதால் இந்த இருவர் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது.