நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார்
சென்னையில் நடந்த இயக்குனர் இரா.சரவணன் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சசிகுமார் பேசியது, ''இயக்குனர் சரவணன் என் நண்பர் மட்டுமல்ல, இன்னும் ஸ்பெஷலானவர். அவர் தனக்காக எதுவும் எப்போதும் கேட்டதில்லை. அவரை 2010ம் ஆண்டில் தான் சந்தித்தேன். அன்று அறிமுகமான நட்பு இன்று வரை தொடர்கிறது. எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என்னுடன் தோளுக்கு தோளாக நின்று உதவுபவர். நான் மனதளவில் உடைந்து போயிருந்த போது ஆறுதல் சொல்லி தேற்றியவர் சரவணன்.
சங்காரம் நாவலை படித்த பிறகு இது நன்றாக இருக்கிறது இதை திரைப்படமாக உருவாக்குவோம். இந்த கதையில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர் இதில் சூரி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதாபாத்திரத்திற்கு சூரி என்றே பெயர் வைத்திருக்கிறேன் என்றார். நிச்சயமாக இந்த நாவல் திரைப்படமாக உருவானால் மிகப்பெரிய வெற்றியை பெறும். சுப்பிரமணியபுரம் படத்தை போல் இந்த சங்காரம் நாவலும் படமாக உருவாகி வெற்றி பெறும். என்னைப் பொறுத்தவரை சங்காரம் நாவலை ஒரு திரைக்கதை புத்தகமாக தான் நான் பார்க்கிறேன்'' என்றார்.