உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதல் காரை பரிசாக வாங்கிய பாகவதர்

பிளாஷ்பேக்: முதல் காரை பரிசாக வாங்கிய பாகவதர்


இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெற்றாலோ, அல்லது நல்ல வரவேற்பை பெற்றாலோ படத்தின் இயக்குனருக்கோ, நடிகருக்கோ தயாரிப்பாளர் ஒரு காரை பரிசாக வழங்குவார். சமீபத்தில 'சிறை' படத்தின் இயக்குனருக்கு அதன் தயாரிப்பாளர் படம் வெளிவரும் முன்பே காரை பரிசாக வழங்கினார்.

இந்த வழக்கத்தை தொடங்கி வைத்தவர் தயாரிப்பாளர் லேனா செட்டியார். 'மதுரை வீரன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். தியாகராஜ பாகவதர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது லேனா செட்டியார் பாகவதருடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். ஒரு நாடகத்தில் நடிக்க 50 ரூபாய் சம்பளம். இந்த சம்பளத்தில் 50 நாடகம் நடித்து தர வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.

அதன்படி பாகவதர் தமிழகம்முழுவதும் லேனா செட்டியாருக்காக 50 நாடகங்கள் நடித்துக் கொடுத்தார். 50வது நாடகத்தின் முடிவில் லேனா செட்டியார் பாகதவருக்கு ஃபோர்டு கார் ஒன்று வாங்கி பரிசளித்தார். இந்த காரின் அப்போதைய விலை 2 ஆயிரம் ரூபாய். அதோடு பாகவதரின் சம்பளத்தையும் உயர்த்தினார். படத்திற்கு 500 ரூபாய் சம்பளம் பெற்ற வந்த பாகவதருக்கு 750 ரூபாயாக உயர்த்தினார். உயர்த்தப்பட்ட சம்பளத்தில் அவர் நடித்த படம் 'பவளக்கொடி'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !