உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ஒதுங்கிய இயக்குனர்

பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ஒதுங்கிய இயக்குனர்


சில இயக்குனர்கள் ஒரு படம்தான் இயக்கி இருப்பார்கள். அது மிக நல்ல படமாக இருந்திருக்கும் ஆனால் அதன்பிறகு அவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பார்கள். 'அவள் அப்படித்தான்' படத்தை இயக்கிய ருத்ரய்யா, 'ஏழாவது மனிதன்' படத்தை இயக்கிய ஹரிகரன் போன்றவர்கள் இந்த வரிசையை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர்தான் கணேஷ்ராஜ்.

1992ம் ஆண்டு வெளிவந்த 'சின்னத்தாயி' படத்தின் மூலம் கவனம் பெற்றவர். இந்தப் படத்தில்தான் விக்னேஷ்ராஜா அறிமுகமானார். சபீதா ஆனந்த், நெப்போலியன், வினுசக்ரவர்த்தி, ராதாரவி, பத்மஸ்ரீ, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்தனர்.

ஒரு ஆண்மகனிடம் ஏமாந்து ஒரு குழந்தைக்கு தாயாகும் பெண், தன் மகளும் தன்னைப்போலவே ஆகவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக வளர்க்கிறாள். ஆனால் விதி யாரை விட்டது. அவள் மகளும் தாயை போலவே ஒருவனிடம் ஏமாந்து விடுகிறாள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இதனை கிராமிய பின்னணியில் அங்கு நிலவும் ஆணாதிக்கச் சிந்தனையை சொன்ன படம்.

'சின்னத்தாயி' என்றதுமே பலருக்கும் உடனே நினைவிற்கு வரக்கூடிய பாடல் 'கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி' என்கிற பாடல் இளையராஜா இசை அமைத்திருந்தார்.

படம் பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சனரீதியா பாராட்டுகளை குவித்தது. படத்தை இயக்கிய கணேஷ்ராஜ், அதன்பிறகு 'மாமியார் வீடு' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் வரவேற்பை பெறவில்லை. நெப்போலியனை நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'பரணி' என்கிற திரைப்படம், நிதிச்சிக்கலால் வெளியாகவில்லை.

கணேஷ்ராஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். கரிசல் காடுகள், அக்கினி அத்தியாயங்கள், கவசம் என்கிற மூன்று சிறுகதைத் தொகுதியையும் 'பொட்டல்' என்கிற நாவலையும் எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !