உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம்

'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம்


கன்னடத் திரையுலகத்தின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தையும், கன்னடத்தில் யஷ் நடித்துள்ள 'டாக்சிக்' படத்தையும் இணைந்து தயாரித்துள்ளது.

'ஜனநாயகன்' படம் 500 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரான படம் என நீதிமன்றத்திலேயே அதன் பட்ஜெட் பற்றி தெரிவித்தார்கள். அது போல 'டாக்சிக்' படமும் 500 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகி வருவதாக கன்னடத் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் 'ஜனநாயகன்'. அந்தப் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் பெறுவது தாமதமானது. அதனால், தங்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம். தனி நீதிபதி உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்டாலும், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அன்றே அதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதித்து வழக்கை தள்ளி வைத்தது.

இருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடுத்துள்ளது. அதன் விசாரணை நாளைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்பிறகே 'ஜனநாயகன்' சான்றிதழ் பற்றிய முடிவு என்ன என்பது தெரிய வரும்.

டாக்சிக்
இதனிடையே, அந்நிறுவனத்தின் மற்றொரு படமான 'டாக்சிக்' படமும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த வாரம் வெளியானது. யஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அந்த வீடியோவில் ஆபாசமான, ஒழுக்கக் கேடான காட்சிகள் இருப்பதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மகளிர் ஆணையத்தில் புகார், தணிக்கை வாரியத்தில் புகார் என கடந்த சில நாட்களாக பரபரப்பு எழுந்துள்ளது.

யு டியூப் தளங்களில் வெளியாகும் வீடியோக்களுக்கு தணிக்கை இல்லை என்றாலும், தணிக்கை வாரியம் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு முன்பும் சில வீடியோக்கள் மீதும், வெப் தொடர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்து அக்டோபர் 2023ல் வெளிவந்த 'லியோ' படத்தில் 'நான் ரெடிதான் வரவா' என்ற பாடல் பட வெளியீட்டிற்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்தப் பாடலில் உள்ள, குடிப்பழக்கம் பற்றிய வரிகளான, “பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க”, “பத்தவச்சு புகைய உட்டா பவரு கிக்கு, புகையில பவர் கிக்கு,”, “மில்லி உள்ள போனா போதும், கில்லி வெள்ல வருவான்டா” ஆகிய வரிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது.

அது மட்டுமல்லாது பாடலில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை மாற்றவும், பாடலில் எச்சரிக்கை வாசகங்களை, தெள்ளத் தெளிவாக தெரியும் வகையில் சேர்க்கவும் சொன்னது. அதையடுத்து தணிக்கை வாரியம் உத்தரவிட்டபடி அவை மாற்றப்பட்டு, யு டியூப் தளத்தில் மறுபதிவேற்றம் செய்யப்பட்டது.

இவ்வளவும் பட வெளியீட்டிற்கு முன்பாக, படம் தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பாக அந்த ஒரே ஒரு பாடலுக்காக செய்யப்பட்டது.

அது போல, தணிக்கை வாரியம் 'டாக்சிக்' வீடியோவின் 'ஆபாசம், ஒழுக்கக்கேடு' குறித்து நடவடிக்கை எடுத்து அந்தக் காட்சிகளை நீக்கவும், வேறு காட்சிகளை சேர்க்கவும், எச்சரிக்கை வாசகங்களை பதிவிடவும் உத்தரவிட வாய்ப்புள்ளது. இல்லையென்றால் அந்தக் காட்சிகளை முழுமையாக நீக்கவும் கூட சொல்லலாம்.

இரண்டு படங்களில் சுமார் 1000 கோடி முதலீடு செய்துள்ள ஒரு நிறுவனத்திற்கு இப்படியான ஒரு சர்ச்சை, சிக்கல் ஏற்பட்டுள்ளது திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !