உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாடுகளை நானே குளிப்பாட்டுவேன்: அட...டா... அதுல்யா

மாடுகளை நானே குளிப்பாட்டுவேன்: அட...டா... அதுல்யா


தமிழ் சினிமாவில் படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஸ்டேட்டஸ் ஆக வைத்து கொண்டாடி அழகு பார்த்த பெருமை இவருக்கு உண்டு. கொங்கு மண்டலத்திலிருந்து சினிமாத்துறைக்கு சென்ற அழகுதேவதை. காதல் கண் கட்டுதே, சாட்டை, நாடோடி 2 என நடித்த படங்கள் அனைத்திலும் தன் தனித்திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அதுல்யா ரவி.

சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற 'டீசல்' படத்தையடுத்து 'மிஸ்டர் எக்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்த அதுல்யாரவி, தினமலர் பொங்கல் மலருக்காக மனம் திறந்ததாவது...

சினிமாவுக்கு திட்டமிட்டு எல்லாம் வரவில்லை. கல்லுாரியில் படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து நாங்களே கை காசை போட்டு சாதாரண கேமிராவில் 'காதல் கண் கட்டுதே' என்ற குறும்படத்தை எடுக்க நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அது திரைப்படமாக வெளியிட முடிவானது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் கொண்டாட துவங்கினர்.

குறிப்பாக என் போட்டோ, கண்களை வாட்ஸ்ஆப், பேஸ்புக் ஸ்டேட்டஸாக ரசிகர்கள் வைத்திருந்தது அனைத்து தரப்பினரிடம் என்னை கொண்டு போய் சேர்த்து விட்டது. பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ, தியேட்டர்கள் என படங்கள் ரீச் ஆவது ஒருபுறம் இருந்தாலும் என்னை பொறுத்தவரை பெரியளவில் காசு போடாமல் உழைப்பை மட்டுமே கொடுத்து வெளியான காதல் கண் கட்டுதே ரீச் ஆனது பெரிய விஷயம் தான்.

டீசல் படம் இந்தளவுக்கு பேசப்படும் என எதிர்பார்க்கவில்லை. அந்த படமும் பேசப்பட்டது சந்தோஷம் தான். தற்போது ஆர்யாவுடன் நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் படம் முடிந்து விட்டது. விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தற்போது நடிகைகளில் யார் நிறைய ஹீரோக்களுடன் நடிக்கிறார்கள், அதிக படங்கள் வைத்துள்ளனர் என்பதை வைத்து தான் அவர்களை 'புக்' செய்கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது. அதே வேளையில் சில இயக்குனர்கள் தாங்கள் எழுதிய கதைக்கு பொருத்தமாக சரியாக இருப்பார்கள் எனக் கருதினால் மட்டுமே சொந்த மண்ணைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறார்கள்.

காந்தாரா, அமரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது சந்தோஷம். பெண்கள் முக்கியத்துவம் பெற்ற படங்களுக்கு கிடைத்த வரவேற்பும் நல்லது தான். டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களை பார்க்கும் போது எந்த நடிகையாக இருந்தாலும் இதுபோன்ற படங்களில் நடித்திருக்கலாமே என எண்ணம் ஏற்படுவது இயல்பு. பொங்கல், தீபாவளியை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறோம். என் குடும்பமே விவசாய குடும்பம். எங்கள் வீட்டில் நான் சிறுமியாக இருக்கும் போதே மாடுகள் வளர்த்தனர். சிறிய வயதில் மாடுகளை குளிப்பாட்டியிருக்கிறேன். பொங்கல் வந்து விட்டால் மாடுகளின் கொம்புகளுக்கு நான் தான் பெயின்ட் அடிப்பேன்.

எனவே தற்போது எந்த படப் பிடிப்பில் இருந்தாலும் பொங்கலுக்கு கோவை வந்து பொங்கல் கொண்டாடுவேன். தொண்டாமுத்துாரில் தோட்டம் இருக்கிறது. வீடு வடவள்ளியில் இருக்கிறது. பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு ஊரில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவோம். சர்க்கரை பொங்கல் நானே வைப்பேன். ஊரில் பொங்கலையொட்டி நடக்கும் ஜல்லிக்கட்டை பார்த்திருக்கிறேன். எல்லோருமே சந்தோஷமாக பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள் என்றவாறு விடைபெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !