அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா
சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஜனவரி 10ம் தேதி திரைக்கு வந்த படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நேரத்தில் சென்சார் பிரச்னை காரணமாக திட்டமிட்டபடி பொங்கலுக்கு விஜய்யின் 'ஜனநாயகன்' படம் திரைக்கு வரவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்திருப்பதோடு, பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ள பராசக்தி படத்தை குறி வைத்து சோசியல் மீடியாவில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பராசக்தி படத்தை பார்த்து விட்டு பொதுமக்கள் காரி துப்புவது போலவும், அனைத்து தியேட்டர்களும் காலியாக கிடக்கும் நிலையில் இலவசமாக டிக்கெட் கொடுத்து கூட்டத்தை கூட்டுவதாகவும் செய்தி பரப்பிக் கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் இது குறித்து பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா அளித்துள்ள ஒரு பேட்டியில், ''பொங்கலுக்கு எந்த நடிகரின் படம் திரைக்கு வரவில்லையோ அவரது ரசிகர்கள் பராசக்தி படத்தை ஓட விடக்கூடாது என்று திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். அடையாளம் தெரியாத கணக்குகளின் பின்னால் இருந்து இது போன்ற மோசமான தாக்குதல்களை நடத்துகிறார்கள். இந்த தாக்குதல்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.
குறிப்பாக பிளாஸ்டிங் தமிழ் சினிமா என்ற கணக்கிலிருந்து ஒரு பதிவு போட்டு உள்ளார்கள். அதில், சென்சார் போர்டிடம் சான்றிதழ் வாங்குவது பெரிய விஷயம் இல்லை. விஜய் அண்ணா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, மன்னிப்பு சான்றிதழ் வாங்கு. இன்னும் ஒரு வாரம் உள்ளது. அவர்கள் மன்னித்து விட்டால் பராசக்தி படம் ஓடும் என்று பதிவிட்டிருப்பதாக'' தெரிவித்திருக்கும் இயக்குனர் சுதா கொங்கரா, ''பராசக்தி படம் ஓடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற ரவுடிசம், குண்டர் கலாசாரத்தில் ஈடுபடுவது மோசமான செயல். ஒரு படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு படத்தை தோல்வி அடையச் செய்ய திட்டமிடுவது ஒட்டுமொத்த சினிமாவுக்குமே ஆரோக்கியமானது அல்ல'' என்றும் சுதா கொங்கரா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
தணிக்கை வாரியம்
மேலும் அவர் கூறுகையில், ''தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவினர் பராசக்தி படத்தை பார்த்துவிட்டு, எப்பவோ நடந்த விஷயங்களை மீண்டும் தூண்டிவிட்டு கிளர பார்க்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான், 'வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்; இனப்படுகொலை நடந்தது என்றால் அது திரும்பவும் நடக்கக் கூடாது என்பதற்காகவே நான் இதை பேசுகிறேன். வரலாற்றில் நடந்ததை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். துரந்தர், காஷ்மீர் பைல்ஸ் படங்களை எடுத்தார்களே அது எதற்காக? நடந்ததைத் தானே எடுத்தார்கள் என்றேன்'' எனவும் பேசியுள்ளார்.