எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை
'நீ கிட்ட வந்து நின்னா ஹார்ட் பீட்டு ஸ்பீட் ஆகுது...' என ரசிகர்களை 'புல்லட்' பாட்டில் துள்ளல் போட வைத்த அழகு சிலை கிர்த்தி ஷெட்டி. 2025லேயே மூன்று தமிழ் படங்களுடன் வர வேண்டியவர், இந்தாண்டு பொங்கலுக்கு 'வா வாத்தியார்' உடன் களமிறங்குகிறார். தித்திக்கும் பொங்கலுக்கு அவர் அளித்த இனிப்பான பேட்டி....
கோவை எனக்கு பிடித்த நகரம் என்கிறீர்கள்; என்ன பிடித்தது?
அந்த ஊர் மக்களின் மரியாதை, ஸ்லாங், சிறியவர்களை கூட மரியாதையாக அழைக்கும் விதம், சாப்பாடு... இப்படி நிறைய சொல்லலாம். நான் மும்பையில் வளர்ந்தாலும் கோவையில் உள்ள என் பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு வருவேன். இப்போதும் அங்கு உறவினர்கள் இருக்கிறார்கள், அதனால் கோவை மீது பாசம் அதிகம்.
பாலாவின் 'வணங்கான்'-ல் நடித்தது பற்றி?
சூர்யா அதில் ஹீரோவாக நடித்தபோது நான் ஹீரோயினாக நடித்தேன், அதை மறக்க முடியாது. பாலா கோபக்காரர், திட்டுவார் என சொல்வார்கள். அவர் அப்படிப்பட்டவர் இல்லை. ஒவ்வொரு ஷாட்டையும் நேர்த்தியாக எடுப்பார். அவரது படப்பிடிப்பில் நிறைய கற்றுக் கொண்டேன். அந்த படம் நின்றது வருத்தமே.
'வா வாத்தியார்' படத்தில் நடித்துள்ளீர்கள். எம்.ஜி.ஆர்., பற்றி தெரியுமா?
எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' படத்தை பார்த்து ரசித்திருக்கிறேன். அப்போது முதல் சரோஜா தேவியையும் பிடித்தது. தலைமுறைகள் பல கடந்து இன்றும் எம்.ஜி.ஆர்., பற்றி பேசுகிறோம். அந்தளவுக்கு அவர் நல்லது செய்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட வா வாத்தியார் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. ஜாலியான படம்
'காந்தாரா' மாதிரியான படங்கள் பற்றி உங்கள் பார்வை?
தனிப்பட்ட முறையில் 'காந்தாரா' எனக்கு பிடித்த படம். காரணம் எங்கள் மூதாதையர்களும் அந்த கதை நடக்கும் துளு பகுதியை சேர்ந்தவர்கள். குலதெய்வம், பாரம்பரிய தெய்வங்கள் மீது நம்பிக்கை உண்டு. அந்த படம் உலகளவில் வெற்றி பெற்றது கூடுதல் மகிழ்ச்சி.
ஏற்கனவே நடித்த படங்கள் தள்ளி போனது பற்றி?
ஒரு நடிகையாக நாம் நடித்த படங்கள் பண்டிகை காலங்களில் வர வேண்டும் என்று பலர் விரும்புவார்கள், நானும் அப்படிதான். சில காரணங்களால் வா வாத்தியார் படம் தீபாவளிக்கு வராதது வருத்தம். பொங்கலுக்கு வருவது மகிழ்ச்சி.
தமிழில் அதிகம் நடிக்காதது ஏன்?
தமிழ், தெலுங்கு எதுவாக இருந்தாலும் எனக்கு சரியான கதையாக இருக்குமா என பார்த்து தான் தேர்வு செய்கிறேன். அவசரப்படவில்லை. இப்போது தான் கேரியரை ஆரம்பித்துள்ளேன், இன்னும் காலம் இருக்கிறது.
ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ என உங்களுக்கு போட்டி அதிகமோ?
நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. எனக்கு நான் தான் போட்டி. எனக்கான கதைகள் என்னை தேடி வரும். சினிமாவில் எனக்கான பெயர் கிடைக்க நிறைய உழைக்கணும்; அதற்கு நான் தயார்.
உங்களை கவர்ந்த நடிகைகள்?
ஸ்ரீதேவி, சவுந்தர்யா படங்கள் பார்த்து நம்மாலும் இப்படி நடிக்க முடியுமா என வியந்தது உண்டு.
சினிமாவுக்கு வரவில்லை என்றால்...
சின்ன வயது ஆசை டாக்டர் ஆவது. நிறைய பேருக்கு உதவலாம். வளர வளர 'பேஷன்' மீது ஆர்வம் வர நடிக்க வந்து விட்டேன்.
பொங்கல் பண்டிகை பற்றி...
தமிழ் பண்பாடு பேசும் பண்டிகை பொங்கல். அதனை கொண்டாடுவேன். இந்த பொங்கலில் மனதெல்லாம் மகிழ்ச்சி பொங்க எங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும்.