மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ்
மலையாளத்தில் கடந்த நவம்பர் மாதம் எக்கோ என்கிற திரைப்படம் வெளியானது. டிஞ்சித் அய்யத்தன் என்பவர் இயக்கிய இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. குறிப்பாக நடிகர் வினித், நரேன் ஆகியோரை தவிர அவ்வளவாக அறிமுகம் இல்லாத நடிகர்கள் நடித்திருந்த இந்தப் படம் நாய்களின் விசுவாசத்தை மையப்படுத்திய ஒரு பழிவாங்கல் படமாக உருவாக்கப்பட்டு இருந்தது தான் ரசிகர்கள் அனைவரையும் கவர்வதற்கு காரணமாக இருந்தது.
இந்த படம் மலையாளத்தையும் தாண்டி தமிழில் உள்ள பல பிரபலங்களின் பாராட்டுகளையும் அவ்வப்போது பெற்று வந்தது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் எக்கோ திரைப்படம் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கூறி படத்தின் இயக்குனர் டிஞ்சித் அய்யத்தனை பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பியானா மோமின் குறித்து பாராட்டும் போது, அவர் மிகப்பெரிய கவுரவங்களுக்கு தகுதியானவர் என்றும் உலகத்தரம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்' என்றும் தனது பாராட்டுகளை கூறியுள்ளார்.
இந்த படத்தில் வயதான பெண்மணி கதாபாத்திரத்தில் நாய்களை மட்டுமே துணைக்கு கொண்டு ஒரு மலைப்பகுதி வீட்டில் வசித்து வரும் ஒரு வயதான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பியானா மோமின். இத்தனைக்கும் இவர் தொழில் முறை நடிகை அல்ல. சினிமாவுக்கு புதியவர். சொல்லப்போனால் மேகாலயாவில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். படத்தை தாங்கிப் பிடிக்கும் வலுவான கதாபாத்திரத்தில் பல மர்மங்களை தன்னகத்தே கொண்ட ஒரு பெண்ணாக இவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பதால் அவர் தனுஷை கவர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.