உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 சங்கராந்தி : தெலுங்குப் படங்களின் வசூல் நிலவரம்

2026 சங்கராந்தி : தெலுங்குப் படங்களின் வசூல் நிலவரம்

தெலுங்கத் திரையுலகத்தில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பிரபாஸ் நடித்த 'தி ராஜா சாப்' படம் ஜனவரி 9ம் தேதியும், சிரஞ்சீவி நடித்த 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படம் ஜனவரி 12ம் தேதியும், ரவி தேஜா நடித்த 'பர்த மஹாசாயுலகு விக்ஞாபதி' படம் ஜனவரி 13ம் தேதியும், நவீன் பொலிஷெட்டி நடித்த 'அனகனகா ஒக ராஜு', ஷர்வானந்த் நடித்த 'நரி நரி நடுமு முராரி' ஜனவரி 14ம் தேதியும் வெளிவந்தன.

இவற்றில், பிரபாஸ் நடித்த 'தி ராஜாசாப்' படம் 4 நாட்களில் 201 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சிரஞ்சீவி படம் 200 கோடி வசூலைக் கடந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படமும் 4 நாட்களில் இந்த வசூலைப் பெற்றுள்ளது.

மற்ற படங்களில் நவீன் பொலிஷெட்டி நடித்த 'அனகனக ஒக ராஜு' படமும், ஷர்வானந்த் நடித்த 'நரி நரி நடும முராரி' படமும் லாபம் தரும் படங்களாக அமையும் என பிரபல தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான தில் ராஜு தெரிவித்துள்ளார்.

'பிரபாஸ்' நடித்த 'தி ராஜா சாப்' படம் 200 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தாலும் லாபம் தரும் படமாக அமையுமா என்பது சந்தேகம் என்கிறார்கள். ரவி தேஜா நடித்த 'பர்த மஹாசாயுலகு விக்ஞாபதி' படம் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளதாம்.

அமெரிக்க வசூலைப் பொறுத்தவரையில், சிரஞ்சீவி, பிரபாஸ் படங்கள் இரண்டுமே 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளன.

இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் அடுத்த வாரம்தான் எந்தப் படம் எந்த அளவு லாபம் தரும் என்பது தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !