உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நெப்போ கிட்ஸ்' : தமிழ் சினிமாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை

'நெப்போ கிட்ஸ்' : தமிழ் சினிமாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை

'நெப்போ கிட்ஸ்', அதாவது தமிழில் 'செல்வாக்குள்ள வாரிசுகள் நடிகர்கள்' என்று அர்த்தம். ஹிந்தித் திரையுலகத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் முன்னேறி வந்த எந்த பின்புலமும் இல்லாத நடிகரான சுஷாந்த் சிங் 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அப்போததான் 'நெப்போடிஸம், நெப்போ கிட்ஸ்' என்பது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஹிந்தித் திரையுலகத்தின் அதிகார பலம் கொண்டவர்கள் தான் அவரது மறைவுக்குக் காரணம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். அவரது தற்கொலை குறித்த சந்தேகம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனிடையே, தமிழ் சினிமாவில் தற்போது 'நெப்போடிஸம், நெப்போ கிட்ஸ்' பற்றி கடந்த சில நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் சிவகார்த்திகேயன்.

விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படத்தை வெளியிடுவதா என்று சிவகார்த்திகேயன் மீதான சைபர் தாக்குதல் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. சில யு டியூப் சேனல்கள், சில இன்புளூயன்சர்கள் அவரைக் கடுமையாக, நேரடியாக தாக்கிப் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள். அது மட்டுமல்ல விஜய் ரசிகர்கள் பலரும் 'பராசக்தி' படத்தையும், சிவகார்த்திகேயனையும் கடுமையாகத் திட்டி வருகிறார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் அவருடைய குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் இருந்த சிவகார்த்திகேயன் பதின்ம வயது மகளைப் பற்றித் தரக்குறைவான கமெண்ட்டுகள் சிலவற்றை விஜய் ரசிகர்கள் பதிவிட்டிருந்தனர். அந்தக் கமெண்ட்டுகளைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகக் காவல்துறையை 'டேக்' செய்து பலரும் குறிப்பிட்டிருந்தனர்.

ஜீவா நடித்து தற்போது வெளிவந்துள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. 'ஜனநாயகன்' பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக ஜீவா பேசியிருந்தார். அதனால், சிவகார்த்திகேயனைத் திட்டிப் பேசிய அவருடைய பழைய வீடியோ ஒன்றை எடுத்து தற்போது பகிர்ந்து வருகிறார்கள்.

இதையடுத்து 'வாரிசு நடிகர்களின்' மனநிலை என்ன என்பது குறித்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் 'நெப்போட்டிஸம், நெப்போ கிட்ஸ்' என்ற வார்த்தைத் தாக்குதலை ஆரம்பித்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, விஷால், ஜீவா, ரவி மோகன், அதர்வா, ஜெய், விக்ரம் பிரபு, அருண் விஜய், கவுதம் ராம் கார்த்திக், சிபிராஜ், சாந்தனு, விக்ராந்த் என நிறைய வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். அஜித், விக்ரம், ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தங்கள் சுய முயற்சியால், திறமையால் முன்னேறிய நடிகர்களும் இருக்கிறார்கள்.

'ஜனநாயகன்' என்ற ஒரே ஒரு படத்தின் தணிக்கை விவகாரத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் பிரிவினை ஏற்படுத்தும் வேலையை விஜய் ரசிகர்கள் ஆரம்பித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் பின்புலமாக செயல்படுபவர்களையும் நடுநிலை சினிமா ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !