மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம்
திரைப்படங்களுக்கான தணிக்கையில் சில புதிய விதிகளை 2024ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதில் காது கேளாதோரும் படங்களைப் பார்த்து புரிந்து கொள்ளும் விதத்தில் சப் டைட்டில் இடம் பெறுவது, பார்வையற்றவர்களும் படத்தைப் பார்க்கும் விதத்தில் ஒலி வடிவில் காட்சிகளை விவரிப்பது ஆகியவை சேர்க்கப்பட வேண்டும் என்று விதிகளில் சேர்த்திருந்தார்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மார்ச் 15, 2026 முதல் அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தற்போது தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
புதிய படங்களை தணிக்கைக்கு சமர்ப்பிக்கும் போது சப் டைட்டில், ஒலி வடிவம் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்பினால் மட்டுமே அந்தப் படங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
இந்த புதிய அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சப் டைட்டில், ஒலி வடிவம் ஆகியவற்றுடன் படத்தைப் பார்த்தால் அது சினிமா பார்க்கும் அனுபவத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என சிலரும், அதை வரவேற்று சிலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
தேவைப்படுபவர்களுக்கு மட்டும் இந்த வசதிகளுடன் படத்தைப் பார்க்கும் அனுபவத்தை வழங்கலாம் என்பதும் ஒரு கோரிக்கையாக எழுந்துள்ளது. இது குறித்து திரையுலகினர் என்ன கருத்து தெரிவிக்கப் போகிறார்கள் என்பதும், ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தும் இதன் நிலை எதிர்காலத்தில் அமையலாம்.