உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'எல்சியு' : மொத்தமாக மூடிவிட்டாரா லோகேஷ் கனகராஜ் ?

'எல்சியு' : மொத்தமாக மூடிவிட்டாரா லோகேஷ் கனகராஜ் ?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் 'மூவி மார்க்கெட்டிங்' என்பது சிலரால் 'திறம்பட' நடத்தப்பட்டு வருகிறது. சில இளம் தலைமுறை இயக்குனர்கள் 'மும்பை சினிமா மார்க்கெட்டிங்' ஸ்டைலில் தங்களைத் தாங்களே 'புரமோஷன்' செய்ய ஆரம்பித்தார்கள். சில சுமாரான படங்களைக் கூட சூப்பர் ஹிட் படங்கள் என்றும், தரமான படங்கள் என்றும், அந்தப் படங்களுக்கு 5க்கு 4 ஸ்டார்கள் என்று, ஏன் சில படங்களுக்கு 5க்கு 5 ஸ்டார்கள் என சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் மூலம் உருவாக்கினார்கள்.

ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்து அதைப் பரபரப்பாக்க, 'டிரென்டிங்' என்ற ஒன்றைச் சேர்த்தார்கள். இப்படித்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த சில படங்களில் 'எல்சியு' என்ற ஒன்றைப் பேச வைத்தார்கள். அதாவது, 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்'.

லோகேஷ் இயக்கத்தில் இரண்டாவது வந்த படமான 'கைதி' படத்தில் இருந்த சில காட்சிகள், கதாபாத்திரங்களின் தொடர்ச்சியாக 'விக்ரம்' மற்றும் 'லியோ' படத்தில் அதைத் தொடர்ந்தார். 'விக்ரம்' படத்தின் கிளைமாக்ஸில் சூர்யா நடித்த 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அது பின்னர் தனி படமாக வரும் என்றார்கள்.

இந்த 'எல்சியு'வை கடந்த வருடம் தான் இயக்கிய 'கூலி' படத்தில் தொடரவில்லை லோகேஷ். அந்தப் படத்தை முடித்த பின் 'கைதி 2' படத்தை எடுப்பார் என்றும் 'ரோலக்ஸ்' படத்தை எடுப்பார் என்றும் சொன்னார்கள்.

ஆனால், 'மாநகரம்' படத்தில் அவரை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரே, அடுத்து 'கைதி 2' படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்து அவரை முன்னிறுத்தினார். இருந்தாலும் தற்போதைக்கு 'கைதி 2' படம் உருவாக வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். அந்தப் படத்திற்காக லோகேஷ் கொடுத்த பட்ஜெட், அவர் கேட்ட சம்பளம் மிக அதிகம் என்று தகவல்.

அதனால், அல்லு அர்ஜுனின் 23வது படத்தை இயக்கப் போய்விட்டார். அந்தப் படத்தில் அவர் 'எல்சியு' என்பதைத் தொடர்வாரா என்பதும் சந்தேகம்தான். 'கைதி' படத்தில் அவர் உருவாக்கிய கதை, கதாபாத்திரம் ஆகியவற்றின் உரிமையை அவர் தயாரிப்பாளருடன் இணைந்து பகிர்ந்திருந்தால், அத்தயாரிப்பாளரிடமும் அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்த முடியும்.

எனவே, அல்லு அர்ஜுனின் 23வது படத்திலும் 'எல்சியு' இடம் பெறுமா என்பது சந்தேகம்தான். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாம். அதை முடிப்பதற்கு ஒரு வருடம் ஆகிவிடும். அல்லு அர்ஜுன் படத்திற்குப் பிறகு அமீர்கான் நடிக்கப் போகும் படத்தை இயக்க லோகேஷ் போய்விடவும் வாய்ப்புள்ளது. அதனால், 'கைதி 2' இந்த வருடம் மட்டுமல்ல, அடுத்த வருடமும் உருவாக வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !