நிவின்பாலிக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதி கண்டனம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் இயக்குனர் அப்ரிட் ஷைன் இருவரும் சேர்ந்து தன்னை பண மோசடி செய்து ஏமாற்றி விட்டார்கள் என தயாரிப்பாளர் ஷாம்னாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கு முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிவின்பாலி அப்ரிட் ஷைன் கூட்டணியில் உருவான மகாவீர்யர் என்கிற படத்தை தயாரித்த வகையில் ஷாம்னாஸுக்கு நட்டம் ஏற்பட்டதாகவும் அதை சரிக்கட்டுவதற்காக அடுத்ததாக தாங்கள் உருவாக்க உள்ள ஆக்சன் ஹீரோ பைஜு படத்தின் இரண்டாம் பாகத்தில் தன்னையும் தயாரிப்பாளராக இணைத்துக் கொள்வதாக கூறி பின்னர் பண மோசடி செய்து ஏமாற்றி விட்டனர் என புகாரில் தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே நிவின்பாலியும் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த முழு வழக்கையும் விசாரித்த வைக்கம் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு முழுக்க முழுக்க போலியான ஆதாரங்கள் மூலம் நிவின்பாலிக்கு எதிராக எப்ஐஆர் பதிய வேண்டும் என்பதற்காகவே ஜோடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல விசாரணையின் போது புகார்தாரர் நீதிமன்றத்தில் பேசுகிறோம் என்று தெரிந்தும் கூட தவறான தகவல்களையும் விளக்கங்களையும் அளித்துள்ளார். நிவின்பாலி மற்றும் இயக்குனர் அப்ரிட் ஷைன் இருவருக்கும் எதிராக தொடரப்பட்ட ஒரு மோசடியான வழக்கு என்று தனது தீர்ப்பில் புகார் கொடுத்த மனுதாரர் மீது காட்டமாக விமர்சித்துள்ளார். அந்த வகையில் இந்த வழக்கிலிருந்து இந்த நிவின்பாலி குற்றமற்றவர் என தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.