ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித்
எஸ். தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தெறி. ஹிந்தியிலும் இந்த படம் ரீமேக் ஆனது. அங்கே அட்லி தயாரிக்க, அவர் உதவியாளர் காளீஸ் இயக்கினார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்தவர். ஆனால் ஹிந்தியில் ஹிட்டாகவில்லை.
இந்நிலையில் சச்சின் ரீ ரிலீஸ் வெற்றியை தொடர்ந்து தான் தயாரித்த பல படங்களை ரீ ரிலீஸ் செய்யப் போகிறேன் என தாணு அறிவித்தார். அந்தவகையில் பொங்கலுக்கு ஜனநாயகன் பின்வாங்கியதால் தெறி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. புதிய படங்கள் வெளியீட்டால் தியேட்டர் பிரச்னை, வினியோகஸ்தர் வேண்டுகோளுக்கு இணங்க பின்னர் அந்த தேதியில் இருந்து படம் தள்ளிப்போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வரும் ஜனவரி 23ம் தேதி தெறி ரீ ரிலீஸ் உறுதி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அன்றைய தேதியியில் திரவுபதி 2, ஹாட்ஸ்பாட் 2 ஆகிய படங்கள் வர உள்ளன. அதுமட்டுமல்ல அதே ஜனவரி 23ல் அஜித்தின் மங்காத்தா படமும் ரிலீஸ் ஆகிறது. இதன்மூலம் ரீ ரிலீசில் விஜய், அஜித் மோதுகிறார்கள்.
இதற்கிடையே ஜனநாயகன் பட சிக்கல்கள் அதற்குள் சரியாகி, அன்றைய தேதியில் ஜனநாயகனும் வந்தால் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கிடைக்கும், இல்லையேல் தெறி மீண்டும் தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது.