'யாக்கைத் திரி, காதல் சுடர்', பாடலுடன் வீடியோ பதிவிட்ட மிருணாள் தாகூர் !!
2026 பொங்கலுக்கு சில புதிய படங்களின் வருகை, பல புதிய படங்களின் அப்டேட்கள் என பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதே சமயம் ஒரு புது காதல் கிசுகிசுவையும் இந்தியத் திரையுலகமும், மீடியாக்களும் பரப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என போய்க் கொண்டிருக்கும் தனுஷ், தெலுங்கு, ஹிந்தி என ஓடிக் கொண்டிருக்கும் நடிகை மிருணாள் தாகூர் இருவரும் பிப்ரவரி 14ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு கிசுகிசு மீடியாக்களில் பரபரப்பாக வெளிவந்தது. அதை தனுஷ் தரப்பிலிருந்து மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தன்னைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் நேற்று இரவு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் மிருணாள். ஒரு 'போட்' பயணத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோவின் பின்னணியில் 'ஆய்த எழுத்து' படத்தின் 'யாக்கைத் திரி, காதல் சுடர்' எனும் பாடலைப் பின்னணியில் ஒலிக்கவிட்டு, “நிலைத்த, ஒளிரும் மற்றும் அசைக்கப்படாத,” என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவிற்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் வந்துள்ளன. இருந்தாலும் ஒரு குறும்புக்கார ரசிகர், “மிருணாள் அவரது பதிவில் ஒரு தமிழ்ப் பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்,” என்று கமெண்ட் செய்துள்ளார். அந்தக் கமெண்ட்டை 2500 பேர் ரசித்து வைத்திருக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த 'ஆய்த எழுத்து' படத்தில் காதலர்களான சித்தார்த், த்ரிஷா எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாக ஆடிப்பாடிக் கொண்டாடித் திரியும் பாடல்தான் 'யாக்கைத் திரி' பாடல்.
அந்தப் பாடலை சேர்த்து மிருணாள் பதிவிட்டது, சீரியஸாகவா அல்லது கிசுகிசுக்களுக்கு பதிலடி கொடுக்க 'டிரோல்' செய்துள்ளாரா ?, அது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.