கார் பயணத்தின் போது 20 வருடங்களாக இந்த இரண்டு விஷயங்களை கவனமாக தவிர்க்கும் விவேக் ஓபராய்
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தான் அறிமுகமான 'கம்பெனி' என்கிற முதல் படத்திலேயே வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டின் சாக்லேட் ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு அப்போதைய முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் வெகு வேகமாக வளர்ந்தார். ஆனால் 2015க்கு பிறகு அவர் படங்களில் நடிக்கும் எண்ணிக்கை குறைந்தது.
அந்த வகையில் கடந்த பத்து வருடங்களில் வெறும் 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் விவேக் ஓபராய். படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஒரு தொழிலதிபராக தனது புதிய பயணத்தை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருகிறார் விவேக் ஓபராய். படங்களில் நடிப்பதை குறைப்பதற்கு இவர் 2002ல் சந்தித்த மிகப்பெரிய விபத்து தான் காரணம் என்று விவேக் ஓபராயின் ஜிம் பயிற்சியாளராக வினோத் சன்னா என்பவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த 2002ல் 'ரோடு' என்கிற படத்தில் விவேக் ஓபராய் நடித்துக் கொண்டிருந்தபோது ராஜஸ்தானில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது பிகாணீரிலிருந்து ஜெய்சல்மருக்கு காரில் இரவு நேரத்தில் பயணித்தார் விவேக் ஓபராய். முன் சீட்டில் அமர்ந்து பயணித்த அவர் இரவு நேரம் என்பதால் வேகம் குறைவாக செல்லுமாறு ஓட்டுநரை பலமுறை எச்சரித்தார். ஆயினும் எதிர்பாராமல் சவுக்கு கட்டைகளை பாரமாக ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற ஒட்டக கூட்டத்தின் மீது இவர் கார் மோதியது.
ஒட்டகத்தின் மீது இருந்த சவுக்கு கட்டைகள் கண்ணாடி வழியாக காரை துளைத்து விவேக் ஓபராய்க்கு மிகப்பெரிய காயங்களை ஏற்படுத்தின. அந்த விபத்து அவருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது இருந்து இரவு நேர பயணத்தை விவேக் ஓபராய் தவிர்த்து விடுவதுடன் எப்போதுமே முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பதையும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தவிர்த்து வருகிறார்.