மூன்று வருடங்களுக்குப் பிறகு 'ஆசை'யுடன் வெள்ளித்திரைக்கு திரும்பும் கதிர்
'விக்ரம் வேதா' படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கதிர், அதனை தொடர்ந்து, 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் ஒரு நடிப்புத் திறமை உள்ள கதாநாயகனாக வெளிச்சம் பெற்றார். அதை உறுதிப்படுத்துவது போல 'சிகை, ஜடா' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார் கதிர். இன்னொரு பக்கம் 2022ல் வெளியான 'சுழல்' என்கிற வெப் சீரிஸில் நடித்த கதிர் நடிப்பில் கடைசியாக 2023ல் 'தலைக்கூத்தல்' என்கிற படம் வெளியானது. அதன் பிறகு கடந்த மூன்று வருடங்களாக கதிர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் வெளியாகவில்லை.
இடையில் கடந்த வருடம் மலையாளத்தில் 'மீச' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் கதிர். இந்த நிலையில் தற்போது கதிர் கதாநாயகனாக நடித்துள்ள 'ஆசை' திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இது 2019ல் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'இஷ்க்' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. 'ஜீரோ' என்கிற படத்தை இயக்கிய ஷிவ் மோகா இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான 'ஆசை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவருக்கு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்று தந்தது. அதேபோல இந்த ஆசை திரைப்படம் கதிருக்கு ஒரு திருப்புமுனையாக அமையுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.