உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விமர்சனங்களை மீறி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற நயன்தாரா

விமர்சனங்களை மீறி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற நயன்தாரா


தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அவருடைய படங்கள் ஓடினாலும், ஓடவில்லை என்றாலும் இப்போதைக்கு அவரை மிஞ்சும் அளவிற்கு வேறு யாரும் இன்னும் வரவில்லை. தமிழைத் தவிர அவ்வப்போது மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டு வருவார்.

தமிழில் தற்போது, 'மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அப்படங்கள் அடுத்தடுத்து இந்த வருடத்தில் வெளியாக உள்ளன. இவை தவிர மேலும் சில தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்க உள்ளார். பான் வேர்ல்டு படமான 'டாக்சிக்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தமிழில் அவருடைய கடைசி வெற்றிப் படம் என்று சொன்னால் 2019ல் வெளிவந்த 'பிகில்' படத்தைத்தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'தர்பார், அண்ணாத்தே, கனெக்ட், இறைவன், அன்னபூரணி' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.

ஓடிடியில் 2020ல் நேரடியாக வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் தியேட்டர்களில் வெளிவந்திருந்தால் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம். அதற்கடுத்து ஓடிடியில் நேரடியாக வெளியான 'நெற்றிக்கண், ஓ 2, டெஸ்ட்' படங்கள் வரவேற்பைப் பெறவில்லை.

தெலுங்கில் கடைசியாக நடித்த 'காட்பாதர்', மலையாளத்தில் கடைசியாக நடித்த நடித்த 'கோல்டு', வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதே சமயம் ஹிந்தியில் அறிமுகமானா ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படம் 1000 கோடி வசூலைக் குவித்து பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த 'காட்பாதர்' படம் வந்து மூன்று வருடங்களாகிறது. அதன்பின் மீண்டும் தெலுங்கிலும், சிரஞ்சீவியுடனும் 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்தில் ஜோடியாக நடித்தார். சங்கராந்தியை முன்னிட்டு வெளிவந்த இப்படம் 220 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் கதை நயன்தாரா இதற்கு முன்பு நடித்த தமிழ்ப் படமான 'விஸ்வாசம்', தெலுங்குப் படமான 'துளசி' படங்களின் சாயலில் இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்தன. ஒரே மாதிரியான கதை கொண்ட மூன்று படங்களிலும் நயன்தாராவே நாயகியாக நடித்துள்ளார் என்றும் 'டிரோல்' செய்தார்கள். ஆனால், அனைத்து விமர்சனங்களையும் மீறி அந்தப் படம் சங்கராந்தி போட்டியில் முதலிடத்தில் உள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அடுத்தடுத்து தமிழ், கன்னடம், மலையாளம் தெலுங்கு மொழிகளில் படங்களை வைத்துள்ள நயன்தாராவிற்கு இந்தப் படத்தின் வெற்றி தக்க சமயத்தில் கிடைத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !