'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி
மலையாளத்தில் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக 'சர்வம் மாயா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இளம் இயக்குனர் அகில் சத்யன் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலும் செய்தது. சொல்லப்போனால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நிவின்பாலிக்கு இந்த படம் மீண்டும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக அகில் சத்யன் இயக்க உள்ள படத்தில் மீண்டும் நிவின்பாலி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அகில் சத்யனே கூறியுள்ளார். இந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகும் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறதாம். இன்னும் சொல்லப்போனால் ஹிந்தியில் வெளியான 'ஏ ஜவானி ஹாய் தீவானி' என்கிற படத்தை போல நாங்கள் அடுத்து இணைய இருக்கும் படத்தை தற்போது 'ஏ ஜவானி ஆலுவா தீவானி' என்றுதான் காமெடியாக குறிப்பிட்டு வருகிறோம் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் அகில் சத்யன்.