சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில்
கடந்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் 'சிக்கந்தர்' என்கிற படம் வெளியானது. ராஷ்மிகா மந்தனா இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் தோல்வியை தழுவியது. சிக்கந்தர் படத்தை எடுத்துக் கொண்டிருந்த சமயத்திலேயே சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியதால் சிக்கந்தர் படத்தில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று ஒரு பக்கம் குற்றச்சாட்டாக சொல்லப்பட்டது.
அதன்பிறகு ஒரு பேட்டியில் சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், சல்மான்கானின் படப்பிடிப்பு வசதிக்காக நேரங்கள் மாற்றப்பட்டதும் அவரது விருப்பப்படி கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதும் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் சிக்கந்தர் படம் பற்றி பேசும்போது, “அந்தப் படத்திற்காக ஏ.ஆர் முருகதாஸ் என்னிடம் சொன்ன கதை வேறு. படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட கதை அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டிருந்தது. முதலில் ஏ.ஆர் முருகதாஸ் சொன்ன கதை ரொம்பவே வித்தியாசமாக, என்னை ஈர்ப்பதாக இருந்தது. எதனால் இந்த மாற்றம் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.
சில நேரங்களில் நடிப்புத்திறமை, படத்தொகுப்பு படமாக்கப்படும் காலம் இவற்றையெல்லாம் பொறுத்துக் கூட சில படங்களுக்கு மாற்றம் நிகழும். சிக்கந்தர் படத்திலும் அதுதான் நிகழ்ந்தது என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். அவரது கருத்துப்படி ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் உருவாக்கியிருந்த கதையை படமாகி இருந்தால் சிக்கந்தர் வெற்றி கோட்டை தொட்டிருக்கும் என்பது போலத்தான் தெரிகிறது.