உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்


மலையாள நடிகை ஸ்வேதா மேனன் கவர்ச்சியான மற்றும் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் பெண் தலைவர் என்கிற பெருமையும் பெற்றுள்ளார். அதே சமயம் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக இவர் மீது மேனாச்சேரியை சேர்ந்த மார்ட்டின் என்பவர் எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் “பணம் கிடைத்தால் மீண்டும் ஆபாசமான காட்சிகளில் நடிக்க தயார் ஸ்வேதா மேனன் எப்போதோ ஒரு பேட்டியில் கூறிய விஷயத்தை மேற்கோள் காட்டி அவர் மீது புகார் அளித்தார். அதேசமயம் இந்த புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்வேதா மேனன் மீது அவசர கதியில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது என்று கூறி வழக்கு விசாரணை நிறுத்தி வைத்து உத்தரவு விட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தபோது ஸ்வேதா மேனன் மீதான எப்ஐஆர் மற்றும் வழக்கு தொடர்பான அனைத்து விசாரணை செயல்பாடுகளையும் தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவில் ஸ்வேதா மேனன் பேச்சிலும் அல்லது படங்களில் ஆபாசமாக நடித்ததாக சொல்லப்படுவதிலும்ம் எந்தவிதமான சட்டத்திற்குரிய செயல்களும் காணப்படவில்லை. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கில் தான் குறுகிய காலத்தில் அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. ஸ்வேதா மேனன் ஆபாசமாக நடித்திருப்பதாக மனுதாரர் குறிப்பிட்டு இருந்த ரதிநிர்வேதம், பாலேரி மாணிக்கம், களிமண்ணு போன்ற படங்கள் எல்லாமே சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு தான் வெளியாகி உள்ளன என்று கூறி புகர்தாரரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

அதே சமயம் இதனை தொடர்ந்து ஸ்வேதா மேனன் கூறும்போது, “உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது விசாரணை மூலமாக வெளிப்படுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகி இருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் இந்த வழக்கு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இப்போது என் மீது வழக்கு தொடர்ந்தவர் எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. அவர் இந்நேரம் ஓடி ஒளிந்திருப்பார். ஆனால் நான் அவரை விடப் போவதில்லை. சட்ட ரீதியாக அவர் மீது வழக்குத் தொடரப் போகிறேன். பெண் என்றால் இப்படி புகார் அளிக்கும் போது அடங்கிப் போய்விடுவார்கள் என்று நினைக்கும் அவர்கள் மனோபாவத்திற்கு பதிலடி கொடுத்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !