சிறிய படங்களுக்கு சிக்கலை தருகிறதா ரீ ரிலீஸ் படங்கள்?
தமிழ் சினிமாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேதான் போகிறது. வருடத்திற்கு சராசரியாக 250 படங்கள் வந்தாலும் ஒட்டுமொத்தமாக 20 படங்கள் ஒடினாலே அபூர்வமாக உள்ளது.
கடந்த வருடத்தில் பல கோடி செலவில் எடுக்கப்பட்ட படங்கள் கூட நஷ்டத்தைத் தந்த போது, சில கோடிகளில் எடுக்கப்பட்ட சில சிறிய படங்கள் தான் லாபத்தைத் தந்த படங்களாக அமைந்தன.
இந்நிலையில் சிறிய படங்கள் தற்போது புதிதாக ரீ ரிலீஸ் படங்களால் சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்தப் படங்களை மீண்டும் திரையிடும் உரிமை மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. சுமார் 10 வருடங்கள் பழைய படமாக இருந்தாலும், அந்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் அதிகமாகவே வருகிறார்கள். சில நாட்கள் ஓடினாலும் அந்தப் படங்கள் நல்ல லாபத்தைத் தருகின்றன. அதை தற்போது ஒரு டிரெண்டாகவே மாற்றிவிட்டார்கள்.
பொங்கலுக்கு 'ஜனநாயகன்' படம் திட்டமிட்டபடி வராத காரணத்தால் கடந்த வாரமே விஜய் நடித்த 'தெறி' படத்தை ரீரிலீஸ் செய்வதாக அறிவித்தார்கள். ஆனால், தள்ளி வைத்து ஜனவரி 23ல் வெளியிடுவதாகச் சொன்னார்கள்.
'திரௌபதி 2' படத்தின் இயக்குனரான மோகன்ஜி கேட்டுக் கொண்டதை அடுத்து 'தெறி' படத்தைத் தள்ளி வைத்துள்ளார் அதன் தயாரிப்பாளர் தாணு. 'ஹாட் ஸ்பாட் 2 மச்' பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கும் தயாரிப்பாளர் தாணுவுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இருந்தாலும் இந்த வாரம் அஜித் நடித்துள்ள 'மங்காத்தா' படம் ரீரிலீஸ் ஆக உள்ளது. அந்தப் படத்தைத் தள்ளி வைக்கும்படி அவர்கள் யாரும் வேண்டுகோள் வைக்கவில்லை.
இந்த வாரம் வெளியாக உள்ள 'திரௌபதி 2, ஹாட் ஸ்பாட் 2 மச், மாயபிம்பம்' ஆகியவை சிறிய படங்கள்தான்.
இனி வரும் வாரங்களிலும் சில பல ரீரிலீஸ் படங்கள் வெளியாக உள்ளன. 'காதல் கொண்டேன், அமர்க்களம்' என பழைய சூப்பர் ஹிட் படங்களை டிஜிட்டல் தரத்தில் வெளியிடத் தயாராகி வருகிறார்கள். அவற்றால் புதிய சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் வர அதிக வாய்ப்புள்ளது.