ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் : பாடகர் ரப்பி ஷெர்கில்
சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு பேட்டியில் கூறும்போது ஹிந்தியில் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் அதற்கு பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் கிளப்பின. தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று பின்னர் ஏ.ஆர் ரஹ்மான் விளக்கமும் அளித்தார். இந்த நிலையில் ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்றிய ரப்பி ஷெர்கில் என்கிற பாடகர் அவருடன் பணியாற்றிய போது தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து ரப்பி ஷெர்கில் கூறும்போது, “ஏ.ஆர் ரஹ்மான் ஒரு மிகப்பெரிய ஜீனியஸ். ஆனால் அவரது பாடல்களில் பாடல் வரிகளுக்கு இரண்டாவது இடம் தான் கொடுக்கப்படும். அதாவது உணர்வுகளுக்கு இரண்டாவது இடம் தான் என்று அர்த்தம். அதற்கு காரணம் ஹிந்தி அவருக்குத் தெரியாத ஒரு மொழி என்பதுதான். சொல்லப்போனால் ரஹ்மான் வந்த பிறகு ஹிந்தி திரை உலகில் பாடல் வரிகள் என்பது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இதுதான் எனக்கும் அவருக்கும் இடையே ஒரு பிரச்சனையாக இருந்தது” என்று கூறியுள்ளார்.