84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம்
ஹிந்தியில் தனுஷை வைத்து ராஞ்சனா, அட்ராங்கி ரே கடந்த நவம்பரில் வெளியான தேரே இஷ்க் மெய்ன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆனந்த் எல்.ராய். இவர் தேரே இஷ்க் மெயின் படத்தில் ராஞ்சனா படம் தொடர்பான வசனங்கள், இசை, காட்சிகள் என சிலவற்றை தங்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறி அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இயக்குனர் ஆனந்த் எல்.ராய் மீது வழக்கு தொடுத்துள்ளது.
இது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது “இது ஒரு சீரியஸான பிரச்சனை இல்லை. வியாபாரம் என்று வந்துவிட்டால் இதுபோன்ற சில விஷயங்களை எதிர்கொள்ள தான் வேண்டும். இது ஏன், எப்படி, எங்கிருந்து வந்திருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது. யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் இங்கே சொல்ல முடியும். இது தற்போது வழக்காக மாறி இருப்பதால் இது பற்றி அதிகம் நான் பேச விரும்பவில்லை. ஆனால் இது ஒரு சட்ட ரீதியான விஷயம் என்பதால் என்னுடைய சட்ட ஆலோசகர்கள் இதற்கு தேவையான பதிலை தருவார்கள்” என்று கூறியுள்ளார்.