40ஐக் கடந்தும் முன்னணி ஹீரோயின்களாக அசத்தும் அனுஷ்கா, த்ரிஷா, ஸ்ருதிஹாசன்
ஹாலிவுட்டில் மட்டுமே நடிகைகளுக்கு வயது என்பது ஒரு தடையில்லை என்பது இருந்தது. 50 வயதைக் கடந்தாலும் கூட கதாநாயகிகளாக நடித்து வெற்றி பெற்ற பலர் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் வயது என்பது நடிகைகளுக்கு ஒரு தடையாக இருந்தது. திருமணம் ஆகிவிட்டால் போதும், அவர்களை அண்ணி, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வைப்பார்கள்.
தற்போது திருமணம், வயது ஆகிய தடைகள் எதுவும் இல்லை என்பது மாற்றத்துக்குரிய ஒரு விஷயம். திருமணம் நடந்த பின்பும், ஏன் குழந்தை பெற்ற பின்பும் கூட சிலர் முன்னணி கதாநாயகிகளாக தொடர்கிறார்கள்.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் தற்போது மூன்று நடிகைகள் 40 வயதைக் கடந்த பின்பும் முன்னணி கதாநாயகிகாளக தொடர்ந்து வருகிறார்கள். அதுவும் அவர்கள் 'பேச்சுலர்'களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
அனுஷ்கா, த்ரிஷா, ஸ்ருதிஹாசன் தான் அந்த கதாநாயகிகளில் முக்கியமானவர்கள். விக்கிபீடியா தகவல்படி அனுஷ்கா 44 வயதையும், த்ரிஷா 42 வயதையும், இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ருதிஹாசன் '40 வயதையும் கடந்துள்ளார்கள்.
அனுஷ்கா தற்போது 'கதனார்' மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். த்ரிஷா, தமிழில் 'கருப்பு' படத்திலும், தெலுங்கில் 'விஷ்வம்பரா' படத்திலும், மலையாளத்தில் 'ராம்' படத்திலும் நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன், தமிழில் 'டிரைன்' படத்தில் நடித்துள்ளார். அடுத்து 'ஆகாசம்லோ ஒக தாரா' தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். 20 பிளஸ் நடிகைகளை ஒப்பிடும் போது, இவர்களது பிரபலம் இன்னும் குறையவில்லை என்பது உண்மை.