பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள்
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பார்கள். அது சினிமாவிற்கும் பொருந்தும். அதற்கு ஒரு சிறிய உதாரணம் 'சௌபாக்யவதி' என்ற படத்தின் தயாரிப்பாளர் நாகன்னா, இயக்குனர் ஜம்பன்னா.
இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள். நாகன்னாவும், ஜம்பன்னாவும் இணைந்து தமிழில் 'குடும்பம்' என்ற படத்தை தயாரித்தார்கள். ஜம்பன்னா தயாரித்தார். இந்த படம் ஓரளவிற்கு பெற்றி பெற்று லாபம் கொடுத்தது. அதன் கணக்கு வழக்கில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு நீதிமன்றம் சென்றார்கள்.
இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே நாகன்னா தயாரிக்க, ஜம்பன்னா இயக்கிய படம்தான் 'சௌபாக்யவதி'. இதில் ஜெமினி கணேசன், சாவித்ரி, எஸ்.வி.ரங்காராவ், கே.ஏ.தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்தார்கள். இந்த படத்திற்கு ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். அவரது சிபாரிசின் பேரில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அனைத்து பாடல்களையும் எழுதினார்.
இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒரே காரில் வருவார்கள், ஒரே காரில் நீதிமன்றத்தற்கு செல்வார்கள், மீண்டும் ஒரே காரில் திரும்பி வந்து படப்பிடிப்பை நடத்துவார்கள். கலைவேறு, கணக்கு வழக்கு வேறு என்று வாழ்த்திருக்கிறார்கள் இருவரும்.