கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு
கர்நாடக அரசால் தயாரிக்கப்படும் மைசூர் சாண்டல் சோப்பிற்கு இப்போதும் நல்ல மார்கெட் உள்ளது. இந்த சோப்பின் விளம்பர தூதராக அந்தந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நியமிக்கப்படுவார். அந்த வகையில் தற்போது தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அறிமுக விழாவில் கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், நடிகை தமன்னா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எம்.பி.பாட்டீல் பேசுகையில், “மைசூரு சாண்டல் சோப்பு விளம்பரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்காக நடிகை தமன்னாவுக்கு நன்றி. இவருக்கு உலகளவில் இருக்கும் பிரபலத்தால் வரும் 2030ம் ஆண்டுக்குள் மைசூரு சாண்டல் சோப்பின் விற்பனையை 5 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கர்நாடக அரசின் சோப்பின் விளம்பர தூதராக வெளிமாநிலத்தை சேர்ந்த தமன்னாவை நியமனம் செய்திருப்பதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா, ருக்மணி வசந்த், கிர்த்தி ஷெட்டி என பல முன்னணி நடிகைகள் கர்நாடகாவில் இருக்கும்போது தமன்னாவை ஏன் நியமிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், ''தமன்னாவிற்கு சமூக வலைதளங்களில் 3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருப்பதால், வணிக ரீதியாகவே அவரைத் தேர்வு செய்தோம்” என்று கூறியுள்ளார்.