பேருந்து - கார் விபத்து: தப்பிய ரஜிஷா விஜயன் பட ஹீரோ
மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'மஸ்திஷ்கா மரணம்'. இந்த படம் வரும் பிப்ரவரி 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நிரஞ்ச் மணியம்பிள்ள ராஜு நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள குணச்சித்திர நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜுவின் மகன் ஆவார்.
சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, காரில் தனது நண்பர்கள் குழுவுடன் இவர் பயணித்தபோது கொடுங்கல்லூர் பகுதியில் ஒரு வளைவில் எதிரே வந்த கேரள அரசு பேருந்து இவர்கள் பயணித்த கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அனைவரும் காயம் எதுவும் இன்றி தப்பினார்கள். இருப்பினும் கார் மிகப்பெரிய அளவில் சேதமானது.
இந்த நிகழ்வு தற்போது படக்குழுவினரிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிரஞ்ச்சின் தந்தை மணியம்பிள்ள ராஜு இரவில் தனது காரில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சிக்னலில் சாலையை கிராஸ் செய்தபோது வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் அந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக மணியம்பிள்ள ராஜூ கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையானார். இந்த நிகழ்வு நடந்த ஒரு சில தினங்களிலேயே அவரது மகனும் விபத்தில் சிக்கி இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.