உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர்

பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர்


திரைப்படத்துறையில் எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து வரும் நம் தென்னிந்தியத் திரையுலகம், அந்தந்த மண் சார்ந்த கலாசார, பண்பாட்டினை சிறப்பிக்கும் வண்ணம் கதைகள் பல புனைந்து, அவற்றை திரைப்பட வடிவங்களாக்கி, எண்ணிலடங்கா வெற்றித் திரைப்படங்களை நமக்காக தந்திருக்கின்றன.

சில சமயங்களில் வெற்றி பெற்ற பிற மொழிப் படங்களின் கதைகைளையோ அல்லது வெளிநாட்டு திரைப்படங்களின் கதைகளையோ, முறைப்படி அதன் உரிமம் பெற்று, அவற்றை நம் மண்ணிற்கேற்றவாறு, நம் ரசனைக்கேற்றவாறு வடிவமைத்து திரைப்படங்களாக உருவாக்கியும் வெற்றி கண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வந்த ஒரு தமிழ் திரைப்படம்தான் “அபூர்வ சகோதரர்கள்”.

1841ம் ஆண்டு அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய “தி கார்ஸிகன் பிரதர்ஸ்” என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, 1941ம் ஆண்டு டக்லஸ் பேர்பாங்ஸ் ஜுனியர் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த அமெரிக்க திரைப்படமான “தி கார்ஸிகன் பிரதர்ஸ்” திரைப்படத்தை தமிழ் வடிவமாக்கி, “அபூர்வ சகோதரர்கள்” என்ற பெயரில், ஜெமினி எஸ் எஸ் வாசன் தனது முந்தைய திரைப்படமான “சந்திரலேகா” திரைப்படத்திற்கு இணையாக, பெரும் பொருட் செலவில் தயாரித்து வெளியிட்டிருந்தார். இயக்குநர் ஆச்சார்யா இயக்கத்தில் 1949ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் அன்றைய முன்னணி நாயகனான எம் கே ராதா, மணிவண்ணன், கரிகாலன் என்ற இருவேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.

மேலும் நடிகை பி பானுமதி, ஆர் நாகே;நதிரராவ், ஸ்டண்ட் சோமு, போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படத்தை, தெலுங்கில் “அபூர்வ சகோதரர்லு” என்றும், இந்தியில் “நிஷான்” என்ற பெயரிலும் தயாரித்திருந்ததோடு, இந்தி திரைப்படத்தை ஜெமினி எஸ் எஸ் வாசனே இயக்கியுமிருந்தார். இந்தியில் இரட்டை வேடங்களில் நாயகனாக நடித்திருந்தவர் நடிகர் ரஞ்சன்.

மும்மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்த இத்திரைப்படத்தை, மீண்டும் 22 ஆண்டுகளுக்குப் பின் 'மணிவண்ணன்', 'கரிகாலன்' என்ற இரட்டை வேடங்களில் எம் ஜி ஆர் நடிக்க, “நியு மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் ஒரு வண்ணத்திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் “நீரும் நெருப்பும்”. இயக்குநர் ப நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகை ஜெயலலிதா, அசோகன், ஆர் எஸ் மனோகர், டி கே பகவதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தனர்.

எம் கே ராதா நாயகனாக நடித்திருந்த, முந்தைய “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படம் பெற்றுத் தந்த வெற்றியைப் போல் இத்திரைப்படமும் வெற்றியை ஈட்டித் தரும் என்ற பெரிய எதிர்பார்ப்புகளோடு, 1971ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த எம் ஜி ஆரின் “நீரும் நெருப்பும்” திரைப்படம், எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யத் தவறி தோல்வியைத் தழுவியது என்பதுதான் உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !