உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா

பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா

முன்னணி நடிகர்கள் சில படங்களுக்கு மட்டும் வழக்கமான சம்பளத்தை விட கூடுதலாக கேட்பார்கள். அந்த படத்திற்கு அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டியது இருந்தால், ரிஸ்க்கான சண்டை காட்சிகள் இருந்தால், பிற மொழிளிலும் படத்தை வெளியிட்டால் இப்படி கேட்பதுண்டு. ஆனால் எம்.ஆர்.ராதா இதிலும் வித்தியாசப்பட்டு நிற்கிறார்.

வி.கே.ராமசாமி கதை எழுத, அவரது நண்பர் ஏ.பி.நாகராஜன் வசனம் எழுதி கே.சோமு இயக்கிய படம் 'நல்ல இடத்து சம்பந்தம்'. இந்த படத்தின் கதைப்படி நாயகன் ஒரு திருடன், நெகட்டிவ் கேரக்டர். இதில் நடிக்க சரியான நடிகர் எம்.ஆர்.ராதாதான் என்று முடிவு செய்து. இயக்குனர் சோமுவும், வி.கே.ராமசாமியும் ராதாவை சந்திக்க சென்றார்கள்.

அப்போது ராதா ஒரு படத்திற்கு 60 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். 20 நாள் கால்ஷீட் ஹீரோவாகவோ, வில்லனாகவோ எப்படிவேணாலும் நடிக்கிறேன் ஆனால் சம்பளம் அதுதான். என்னோட கேரக்டரை நானே டிசைன் பண்ணிக்குவேன். அதில் எனது கருத்தை பேசுவேன் என்பதுதான் அப்போது அவரது நிலைப்படாக இருந்தது.

சோமுவும், ராமசாமியும் சந்தித்து கதை சொன்னார்கள். கதையை சொல்லிவிட்டு இந்த படத்தில் நீங்கள் அந்த கேரக்டராகவே இருக்க வேண்டும், இயக்குனர் சொல்படிதான் நடிக்க வேண்டும், தனியான டயலாக், கிண்டல், கேலி எதுவும் இருக்க கூடாது என்று கூறினார்கள்.

இதை கேட்ட எம்.ஆர்.ராதா “அதாவது அந்த கேரக்டராவே வாழணும், ராதா தெரியக்கூடாதுங்றீங்க. இதென்ன பிரமாதம் செஞ்சிட்டா போச்சு. எனக்கு ஒரு படத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் தரணும், ஆனால் நான் ஏன் 60 ஆயிரம் வாங்குறேன் தெரியுமா? அந்த கேரக்டர் மூலமாக மக்களுக்க ஏதோ நாலு விஷயம் சொல்ல முடியுதேங்றதுக்காகத்தான். நீங்க அதை செய்யக்கூடாதுங்றீங்க. அப்படீன்னா ஒரு லட்சம் கொடுத்திருங்க” என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சோமுவும், ராமசாமியும் படத்தோட பட்ஜெட்டே அவ்வளவுதாண்ணே என்று கூறியிருக்கிறார்கள். சரி போகட்டும் 10 ஆயிரம் கூடுதலா போட்டு 70 ஆயிரம் கொடுங்க என்றார், அதற்கு இருவரும் ஒப்புக் கொண்டார்கள். அப்போது ஒரு பவுன் தங்கம் 200 ரூபாய்க்கு விற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பிரேம் நசீர், சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம், சி.கே.சரஸ்வதி, எம்.ஆர்.ராதா, சாரங்கபாணி உள்ளிட்ட பலர் நடித்தனர். எம்.ஆர்.ராதா தனது வழக்கமான பாணியில் இருந்து கேரக்டராக மட்டும் நடித்த மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !