எப்பதான் சர்ட்டிபிகேட் கொடுப்பீங்க? என்னதான் பிரச்னை? தத்தளிக்கும் ஜனநாயகன் படக்குழு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்', கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாகி இதற்குள் சில நுாறு கோடிகளை அள்ளி இருக்க வேண்டும். ஆனால், இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படமே ரிலீஸ் ஆகவில்லை. கோர்ட், கேஸ், பிரச்னைகள் முடிந்தநிலையில், கடந்த வாரம் மும்பையில் ஜனநாயகன் படத்தை மறு தணிக்கை குழுவினர் பார்த்ததாக தகவல். ஆனாலும், இன்னமும் படக்குழுவினர் கைக்கு சர்ட்டிபிகேட் கிடைக்கவில்லை.
மறு தணிக்கையில் சில காட்சிகளை நீக்கிவிட்டார்கள், சில காட்சிகளுக்கு மியூட். குறிப்பாக, இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி நடித்த அரசியல் காட்சிகளுக்கு பிரச்னை என்று கூறப்படுகிறது. ஆனாலும், இன்றுவரை மறுதணிக்கையில் நடந்தது என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
படத்துக்கு சில நாட்களில் சர்ட்டிபிகேட் கிடைத்துவிடும் என்று படக்குழு எதிர்பார்த்த நிலையில், ஒருவாரம் ஆகியும் எந்த தகவலும் இல்லை. தேர்தல் கமிஷன் படம் பார்த்த பின்னரே இறுதி முடிவு என்று கூறப்படுகிறதாம். அவர்கள் எப்போது பார்ப்பார்கள், என்ன சொல்வார்கள். படத்துக்கு என்ன சர்ட்டிபிகேட் கிடைக்கும். எத்தனை கட், மியூட் இருக்கும். எவ்வளவு நேரம் படம் குறைக்கப்படும் என்பது போன்ற தகவல் தெரியாமல் இயக்குனரும், படத்தயாரிப்பு நிறுவனமும் தத்தளித்து வருகிறதாம்.
சென்சார் போர்டு நிபந்தனைகளை இயக்குனர் ஏற்றுக்கொள்வாரா? அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வாரா என்பது அடுத்த பிரச்னை. அதேசமயம்,பெரும்பாலான பிரச்னைகள் முடிந்துவிட்டது. தேர்தல் கழித்துதான் படத்தை ரிலீஸ் செய்கிறோம் என தெளிவாக சொல்லிவிட்டோம். அதனால் விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்களாம் படக்குழுவினர்.