பிளாஷ்பேக் : 50வது படத்திற்கு வெற்றிக் கதையை தேர்வு செய்த சிவாஜி
எல்லா முன்னணி நடிகர்களுமே தங்களது 50வது, 100வது, மாதிரியான மைல்கல் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று அக்கறையோடு செயல்படுவார்கள். நல்ல கதை, நல்ல இயக்குனர்களை தேடுவார்கள். அப்படித்தான் சிவாஜியும் தனது 50வது படத்தின் கதையை தேடினார்.
'பராசக்தி'யில் தொடங்கிய சிவாஜியின் பயணம் ஒரு சில படங்களின் தோல்வி தவிர பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக அமைந்தன. இதனால் தனது 50வது படத்திற்கு ஒரு வெற்றிக் கதையை தேடினார். புதிதாக ஒரு கதையை தேர்வு செய்து ரிஸ்க் எடுப்பதை விட வெற்றி பெற்ற கதையிலேயே மீண்டும் நடிப்பதென முடிவு செய்து அவர் நடித்த படம்தான் 'சாரங்கதாரா'.
சாரங்கதாரா என்பது ஆந்திர மாநிலத்தில் நடத்தப்பட்டு வந்த ஒரு நாட்டுப்புற தெருக்கூத்து நாடகம். இதை ஆந்திர எழுத்தாளர் குஜராடா அப்பாராவ் திருத்தி, செழுமைப்படுத்தி நாடக வடிவமாக்கினார். 1935ம் ஆண்டு இந்த நாடகம் திரைப்படமானது. ஆனால் ஓரளவிற்குதான் வரவேற்பை பெற்றது. ஏன் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பதை அலசி ஆராய்ந்து அடுத்த ஆண்டே 'நவீன சாரங்கதாரா' என்ற படம் வெளிவந்தது. இதில் தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி, நடித்தனர். கே.சுப்ரமணியம் இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
இந்த கதையை சிவாஜி தனது 50வது படத்தின் கதையாக தேர்வு செய்தார். இதில் சிவாஜியுடன் பானுமதி, சாந்தகுமாரி, எஸ்.வி.ரங்காராவ், நம்பியார், ராஜசுலோச்சனா முத்துலட்சுமி உள்ளிட்டோர் நடித்தனர். வி.எஸ்.ராகவன்(நடிகர் அல்ல) இயக்கினார். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். இந்த படமும் வெற்றி பெற்றது. 'வசந்தமுல்லை போல வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே' என்ற காலத்தை வென்ற பாடல் இடம்பெற்றது இந்தப் படத்தில்தான்.