ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - நடிகர் சஞ்சய் தத் சந்திப்பு
தென்னிந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் சென்னை தான் படப்பிடிப்புக்கான மையம் ஆக இருந்தது. ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டி அமைந்த பிறகு பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு அங்கு நடக்க ஆரம்பித்தது. தற்போது கூட சில முன்னணி நடிகர்களின் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு அங்கு நடைபெறுகிறது.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என பிரிந்த பிறகு ஆந்திர மாநிலத்தில் பிலிம் சிட்டி உருவாக்க முயற்சித்து அது இன்னும் நடக்காமல் உள்ளது. அங்குள்ள விசாகப்பட்டிணம் மாநகரத்தில் பிலிம் சிட்டி உருவாக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனாலும், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை விட்டு ஆந்திர மாநிலம் பக்கம் தெலுங்குத் திரையுலகினரும் படப்பிடிப்பை அதிகம் நடத்துவதில்லை.
சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்ற பின்பு, நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்ற பின்பு அவர்களை தெலுங்குத் திரையுலகத்தினர் சில முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இது குறித்து ஆந்திர முதல்வர் அலுவலகம் சார்பில், பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத் இன்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இருவருக்கும் இடையே ஆந்திரப் பிரதேசத்தில் திரைப்படத் தொழிலின் வளர்ச்சி குறித்து விவாதம் நடைபெற்றது. சஞ்சய் தத், மாநிலத்தில் திரைப்படத் துறை சார்ந்த அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் தனது ஆர்வத்தை விளக்கினார். இருவருக்கும் இடையே, அரசின் திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தை திரைப்படப் படப்பிடிப்பு மையமாக மாற்றுவது மற்றும் அதில் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும், அரசு திரைப்பட ஸ்டூடியோக்கள் மற்றும் பிற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது பற்றியும் முதல்வர் தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.