போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை
ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'. இப்படம் 1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் காட்சிகள் சிலவற்றை 'ஏஐ' மூலம் மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அது குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை படத்தின் இயக்குனர் ஆதித்யா தர் வெளியிட்டிருக்கிறார்.
அதில், “துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து பெற்ற அதிகப்படியான அன்புக்கு நான் ஆழ்ந்த நன்றியுடனும் கடமைப்பட்டும் இருக்கிறேன். என்றாலும், சில தனிநபர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ப்ரமோஷனல் மெட்டீரியல்களை, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்தி மாற்றி, பொய்யான மற்றும் தவறான கதைகளை உருவாக்கி பரப்பி வருவது என் கவனத்திற்கு வந்துள்ளது.
அத்தகைய ஒரு போலியான படம், ஹஹம்ஸா/ஜஸ்கிரத்' என்ற கதாப்பாத்திரத்தை தலைப்பாகை அணிந்து சிகரெட் புகைப்பதாக தவறாகச் சித்தரிக்கிறது. இது முற்றிலும் உண்மையல்ல மற்றும் படத்தின் எந்தப் பகுதியிலும் அல்லது நாங்கள் வெளியிட்ட எந்த அதிகாரப்பூர்வ மெட்டீரியலிலும் இல்லை. இது தூண்டிவிடும் நோக்கத்துடன் கூடிய வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறான சித்தரிப்பு ஆகும்.
இதை நான் தெளிவாகக் கூறுகிறேன். சீக்கிய சமூகத்தின் மீது எனக்கு உயர்ந்த மரியாதை உண்டு, மேலும் படத்தில் உள்ள ஒவ்வொரு சித்தரிப்பும் மிகுந்த உணர்வுபூர்வமாகவும், மரியாதையுடனும், பொறுப்புடனும் கையாளப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எந்த திருத்தப்பட்ட உள்ளடக்கத்தின் மூலமும் சொல்ல முயற்சிப்பது தீங்கிழைக்கும் மற்றும் நேர்மையற்றது.
பார்வையாளர்கள் அதிகாரப்பூர்வ உள்ளடக்கத்தை மட்டுமே நம்பி, படத்தை நோக்கம் கொண்டபடி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட தவறான தகவல்களுக்கு இரையாக வேண்டாம். அத்தகைய செயல்கள் உறுதியுடன் கையாளப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.